ஹவானா, பிப்.26- கியூபா அதிபர் பதவியில், மேலும் ஐந்தாண்டுகள் நீடிக்கப்போவதாக, ரவுல் காஸ்ட்ரோ( படம்) அறிவித்துள்ளார்.
கியூபா நாட்டின் தலைவராக இருந்தவர், பிடல் காஸ்ட்ரோ. 2008ல், உடல்நலக் குறைவால், அதிபர் பதவியிலிருந்து விலகி, இளைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம், பதவியை ஒப்படைத்தார்.
தற்போது அதிபராக உள்ளவர் ரவுல் காஸ்ட்ரோ, 81. வயோதிகத்தின் காரணமாக, பதவி விலகப்போவதாக தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடுகளில் முக்கியமானது, கியூபா.
இதனால், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா, விதித்துள்ளது. “காஸ்ட்ரோ சகோதரர்களின் ஆட்சி முடிவுறாத வரை, பொருளாதார தடைகளை நீக்க அமெரிக்க அரசு முன்வராது’ என, அரசியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
நேற்று முன்தினம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில், ரவுல் காஸ்ட்ரோ கலந்து கொண்டு, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, பதவியில் நீடிக்கப் போவதாக அறிவித்தார்.
கியூபாவின் முன்னாள் கல்வி அமைச்சர், மிகுவெல் டயஸ் கேனலை, 51, ராணுவ உயர் அதிகாரியாக, அவர் அறிவித்தார். கியூபா அரசியலில், நம்பிக்கை நட்சத்திரமாக வர்ணிக்கப்படும், மிகுவெல் டயஸ், ரவுல் காஸ்ட்ரோவுக்கு பின், அந்நாட்டு அதிபராக வர, வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.