கோலாலம்பூர், பிப்ரவரி 9 – மஇகா தேசிய உதவித் தலைவரும், இளைஞர், விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் இன்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி வெளியிட்டிருக்கும் முடிவுகளை தான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
செல்லியல்.காம் அவருடன் நடத்திய பிரத்தியேக சந்திப்பின்போது, சரவணன் இந்தக் கருத்தை வெளியிட்டார். அனைத்து தரப்பினரும் சங்கப் பதிவகம் உள்துறை அமைச்சர் வாயிலாக வெளியிட்டிருக்கும் முடிவுகளை ஏற்றுக் கொண்டு பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் சரவணன் கேட்டுக் கொண்டார்.
“உள்துறை அமைச்சரின் அறிக்கையை நான் வரவேற்கிறேன். சங்கப் பதிவகத்தின் முடிவுகளை நான் பின்பற்றுவேன். சாஹிட் ஹாமிடியின் அறிக்கை சரியான நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதோடு, கட்சி தற்போது எதிர்நோக்கியிருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விதமாகவும் அமைந்திருக்கின்றது” என்றும் சரவணன் கூறினார்.
“எல்லா தரப்பினரும் சங்கப் பதிவகத்தின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றினால், நாம் நமது கட்சித் தேர்தலை சுமுகமாக நடத்தி முடித்து, கட்சியில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியிலிருந்து மீண்டு வரலாம்” என்றும் சரவணன் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு மத்திய செயலவையில் சரவணன் தேசிய உதவித் தலைவராக இடம் பெற்றிருந்தார்.
பின்னர் 2013இல் நடந்த கட்சித் தேர்தலிலும் அவர் மீண்டும் உதவித் தலைவர்களில் ஒருவராக வெற்றி பெற்றார். 2013ஆம் ஆண்டுக்கான தேர்தல்தான் சங்கப் பதிவகத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.