Home இந்தியா பாலியல் கொடுமை மாணவி சிங்கப்பூரில் மரணம்: டில்லியில் தடை உத்தரவு

பாலியல் கொடுமை மாணவி சிங்கப்பூரில் மரணம்: டில்லியில் தடை உத்தரவு

1096
0
SHARE
Ad

டெல்லி,டிச.29 – பாலியல் கொடுமைக்கு ஆலான டெல்லி மாணவி சிங்கப்பூரில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததை தொடர்ந்து டெல்லியில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம் டெல்லி மக்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை உடனே தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இந்தியா கேட், ஜந்தர் மந்தர் உள்பட பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது. மத்திய அரசும், டெல்லி போலீசாரும் மிரண்டுப் போகும் அளவுக்கு தொடர்ந்த இந்த போராட்டம் கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில் இன்று மாணவி உயிரிழந்த செய்தி டெல்லியில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இன்று அதிகாலை முதலே போலீசார் டெல்லி சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தியா கேட், ஜந்தர் மந்தர் உள்பட டெல்லியின் முக்கிய பகுதிகளில் போலீசார் சாலை தடுப்பு வைத்துள்ளனர். இந்தியா கேட் பகுதியை இணைக்கும் 4 சாலைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

விஜய் சவுக், ராஜ்பாத் ஆகிய இடங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது டெல்லி  மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அதிரடிப்படை வீரர்களும் சில இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் நகரின் மற்ற பகுதிகளுக்கு ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக 10 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. படேல் சவுக், சென்டிரல் செகரட்டரியேட்,  ஆர்சிஆர், உத்யோக் பவன், ஜார்பக், கான் மார்க்கெட், ராஜீவ் சவுக், பரக்கம்பா, மன்டி ஹவுஸ், பிரகதி மைதான் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்பாத், விஜய் சவுக், இந்தியா கேட், கமல் அத்த துர்க் மார்க் ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் டுவிட்டர் இணையத் தளத்தில் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்கள் திரள்வதைத் தடுக்கும் வகையில் 40 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீசார் டெல்லி முழுக்க நிறுத்தப்பட்டுள்ளனர்.

சென்டிரல் விஸ்தா பகுதியில் மட்டும் 20 கம்பெனி மத்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா வீடு முன்பு 3 கம்பெனி மத்திய போலீசார், பிரதமர் மன்மோகன்சிங் வீடு முன்பு 2 கம்பெனி மத்திய போலீசார், ஜந்தர்மந்தரில் 5 கம்பெனி மத்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே பொது மக்கள் அமைதிகாக்க வேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் அமைதி காத்து உதவுமாறு டெல்லி மாநில முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.