கோலாலம்பூர், மார்ச் 12 – எஸ். பி. எம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பால் தமிழார்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்போவதாக, ம இ கா தேசியத்தலைவர் செனட்டர் டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார்.
தமிழை புறக்கணிக்கும் முயற்சியா? பழனிவேல் அதிருப்தி
எஸ். பி. எம் தேர்வில் தமிழ்ப் பாடங்களுக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்றும், மிக முக்கியமான தேர்வுகளில் ஒன்றான எஸ். பி. எம் தமிழ்- தமிழ் இலக்கிய தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை எடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் தமிழின் சிறந்த வளர்ச்சிக்கு அவர்கள் வித்திடமுடியும் என்றும் அதனை புறக்கணிக்கும் வகையில் அரசு எடுத்துள்ள முடிவை பரிசீலிக்கவேண்டும் என்றும் பிரதமர் துறை அமைச்சருமான பழனிவேல் கேட்டுக்கொண்டார்.
அந்த முடிவை மாற்றுங்கள்- இவ் விவகாரத்தை அமைச்சரவைக்கு கொண்டு செல்வேன்- டத்தோஸ்ரீ, டாக்டர் சுப்ரமணியம்
இதனிடையே எஸ். பி. எம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே எடுக்கமுடியும் என்ற அறிவிப்பால் பெற்றோர்கள்,மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மனிதவள அமைச்சருமான சுப்ரமணியம் இதனை தாம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்போவதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் கடந்த காலத்தில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ். பி. எம் தேர்வில் மற்ற பாடங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தைப் போன்றே தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,10 பாடங்களுக்குள் இவ்விரு பாடங்களையும் மாணவர்கள் எடுக்கமுடியாத நிலையில் தமிழை கூடுதல் பாடங்களாக (10+2) என்ற அடிப்படையில் எடுக்கலாம் என்பதும், இது கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனால் எஸ். பி. எம் தேர்வில் தமிழ்-இலக்கியம் இரண்டையும் விரும்பி எடுக்கும் மாணவர்களுக்கு அதற்குண்டான மதிப்பெண்களும் சான்றிதழில் இடம்பெறும் என்று தெரிவித்த டாக்டர் சுப்ரமணியம், இப்போது கல்வி அமைச்சின் அறிக்கையால் ஏற்பட்டிருக்கும் இந்த விவகாரத்தை தாம் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்து செல்லவிருப்பதாகக் கூறினார்.