Home Photo News செல்லியல் காணொலி : எஸ்பிஎம் தமிழ் மொழி – வாக்கியத்தில் அமைத்தல் – மொழியணிகள் படிவம்...

செல்லியல் காணொலி : எஸ்பிஎம் தமிழ் மொழி – வாக்கியத்தில் அமைத்தல் – மொழியணிகள் படிவம் 4 & 5

14580
0
SHARE
Ad

செல்லியல் : எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – தாள் 2 – வாக்கியத்தில் அமைத்தல் – மொழியணிகள் படிவம் 4 & 5

மார்ச் 28-ஆம் தேதி (2022) நடைபெறவிருக்கும் எஸ்பிஎம் தமிழ்மொழி தேர்வை  எழுதவிருக்கும் மாணவர்களுக்கு மீள்பார்வை செய்ய உதவும் பொருட்டு செல்லியல் சிறப்புக் காணொலிகளை வழங்கி வந்திருக்கிறது. அதனைக் கீழ்க்காணும் இணைப்பில் மாணவர்கள் காணலாம்:

இந்தக் காணொலிகளின் விளக்கங்களின் ஒரு பகுதியாக, மொழியணிகள் பிரிவில் “வாக்கியங்கள் அமைத்தல்” என்பது குறித்த மாதிரி வாக்கியங்களைக் கொண்ட பின்வரும் பகுதியை மாணவர்களின் பயன்பாட்டுக்காக வழங்குகிறோம்.

#TamilSchoolmychoice

இதனை எஸ்பிஎம் தமிழ்மொழி பாடத்திற்கு மாணவர்களைத் தயார் செய்வதில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற விக்னேசுவரி உருவாக்கித் தந்திருக்கிறார். விக்னேசுவரி, வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” என்ற நூலின் ஆசிரியருமாவார்.

எஸ்பிஎம் தமிழ் மொழி 2022 – மொழியணிகள் படிவம் 4 & 5

வாக்கியத்தில் அமைத்தல்

இணைமொழி (படிவம் 4)

  • தங்கள் வீட்டின் அக்கம் பக்கம் குப்பைக் கூளங்களுடன் தூய்மையற்று இருந்ததைப் பலமுறை நகராண்மைக் கழகத்திடம் முறையிட்டும் பயனில்லாததால் மல்லிகா குடும்பத்தினர் தாங்களே தூய்மைப்படுத்தினர்.
  • திரு. நலன் தம் குடியிருப்புப் பகுதியில் அக்கம் பக்கம் உள்ள அனைவரிடமும் இன்முகத்துடன் பழகியதால் அவர் துன்பப்படும்போது அனைவரும் ஓடிவந்து உதவி செய்தனர்.
  • தமிழர்களின் அரிய பெரிய சாதனைகளுள் அனைவரையும் பிரமிக்கவைப்பது இன்றளவும் முழுமையாக கண்டறியமுடியாத நுட்பங்களால் ஆன அவர்களது சிற்பக்கலையும், கட்டடக்கலையுமாகும்.
  • அக்கால தமிழ் அரசர்களின் அரிய பெரிய சாதனைகளைப் பற்றித் தெரிந்துகொண்ட அகழ்வாராய்ச்சியாளர் திரு. நாதன் அக்கால கட்டிடக்கலையைப் பற்றி மேலும் ஆய்வு செய்கிறார்.
  • நமது இன்ப துன்பங்களில் நமக்குக் கைக்கொடுப்பவர்களே உண்மையான நண்பர்கள் ஆவர்.
  • வாழ்க்கையில் இன்ப துன்பம் வருவது இயல்புதான் என்பதனைப் புரிந்து கொண்ட பார்வதி தமக்குக் கஷ்டம் ஏற்படும்போது சோர்ந்து விடாமல், மகிழ்ச்சியாக தம் வாழ்க்கையை நகர்த்துகிறார்.
  • கால நேரம் வரும்போது மட்டும் தம் முயற்சியைக் கொண்டு சம்பாதிக்கலாம் என்று வெறுமனே காத்திருந்த முகிலன் இறுதிவரை வேலை ஏதும் செய்யாமல் வாழ்க்கையில் துன்பப்படுகிறார்.
  • பள்ளி முடிந்து தாமதமாக வீடு திரும்பிய வள்ளி பல சாக்குப் போக்குகளைச் சொல்லியும் தன் அம்மா நம்பாததால் தான் தோழியுடன் பேரங்காடிக்குச் சென்று வந்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டாள்.
  • கடையில் அம்மாவுக்குப் பொருள்கள் வாங்கி வந்த சங்கர் சில்லறைக் காசைத் தவற விட்டதால் சாக்குப் போக்குச் சொல்லி சமாளித்தும், அம்மாவை ஏமாற்ற முடியாததால் உண்மையை ஒப்புக்கொண்டான்.
  • பாலு வீட்டுப் பாடம் செய்யாமல், மறதியாக புத்தகத்தை வீட்டிலேயே விட்டுவிட்டதாகச் சாக்குப் போக்கு கூறினாலும் ஆசிரியர் அவன் கூறியதை நம்பாமல் அவன் புத்தகப் பையிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்தார்.

இணைமொழி படிவம் 5

  • இளவயதில் தங்களைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த பெற்றோர்களைப் பிள்ளைகள் அவர்களது வயதான காலத்தில் மனம் நோகாமல் பார்த்துக்கொள்வது மிகவும் இன்றியமையாததாகும்.
  • இளம் வயதில் தங்களைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த பெற்றோரைப் பிள்ளைகள் பெரியவர்களானவுடன் அனாதை இல்லத்தில் விட்டுவிடாமல் நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • இராணி சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால், தன்னைச் சீராட்டிப் பாராட்டி அன்பாக வளர்த்த மாமா அத்தையை அவர்களது இறுதிக்காலம் வரை தன்னுடனேயே வைத்திருந்தாள்.
  • விருப்பு வெறுப்பு இல்லாத மனநிலை அமைந்து விட்டால் மக்களுக்கு வாழ்வில் பிரச்சினைகள் இருக்காது.
  • விருப்பு வெறுப்பு இல்லாமல் மாணவர் அனைவரிடமும் நன்றாகப் பழகும் ஆசிரியர் திரு.செல்வாவை ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினார்.
  • ஆனந்தன், தன் உறவினர்கள் துன்ப காலத்தில் தனக்கு உதவாதபோதும், அதை மனதில் வைக்காது, அனைவரிடமும் விருப்பு வெறுப்பு இல்லாமல் பழகும் பண்பாளர்.
  • தம்மைத் தூற்றிப்பேசிய உறவினர் அனைவரிடமும் திலகா விருப்பு வெறுப்புக் காட்டாமல் சகஜமாகப் பழகியதால் உறவினர் அனைவரும் தம் செயலை எண்ணி வெட்கித் தலைகுனிந்தனர்.
  • நாம் அண்டை அயலாருடன் சண்டைச் சச்சரவு இல்லாமல் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
  • பள்ளிக்கூடத்தில் எப்பொழுதும் சண்டைச் சச்சரவுகளில் மாட்டிக்கொள்ளும் பாலுவை கட்டொழுங்கு ஆசிரியர் கண்டித்தார்.
  • தான் வளர்க்கும் நாயிடம் சிக்கிக்கொண்டு பயத்தில் கத்திய பூனையை சிறிதும் தயவு தாட்சண்யம் இல்லாமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து எனக்கு ஆத்திரம் வந்தது.
  • தம் தோட்டத்தில் நுழைந்து பயிர்களை மேய்ந்த ஆட்டைச் சிறிதும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அத்தோட்டக்காரர் கட்டி வைத்து அடித்தார்.
  • ஆதி அந்தம் இல்லாத இறைவனே உலகின் எல்லா உயிர்களையும் காப்பதாக என் அம்மா கூறுவார்.
  • திரையரங்கில் நுழைந்தவுடனேயே அசதியால் கண்ணயர்ந்துவிட்ட கோபி அப்படத்தின் ஆதியும் அந்தமும் புரியாமல் வாய்மூடி அமைதியாக இருந்தார்.

உவமைத்தொடர் படிவம் 4

  • வெள்ளத்தால் வீடு முற்றிலும் சேதமடைந்து பரிதவித்துக் கொண்டிருந்த இரகு குடும்பத்தினர் தொடர்ந்து கொரோனா நச்சுயிரி பெருந்தொற்றால் பாதிப்புற்ற போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் பெருந்துன்பத்துக்கு ஆளாகினர்.
  • தமது நெருங்கிய நண்பர் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு அவர்கள் இருவருமே தம்மிடம் முறையிட்டபோது இராமன் இருதலைக்கொள்ளி எறும்பு போல் எவர் பக்கமும் சாரமுடியாது அமைதியானார்.
  • மது அருந்திவிட்டு வாக்குறுதி கொடுப்பவர்களின் வாக்கு, நீர் மேல் எழுத்துப் போல் நிலையில்லாதது என்பதால் அந்த நேரத்தில் அவர்களது பேச்சுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.
  • மிகவும் வறுமையில் வாடிய திரு.வேந்தன் தாம் கடினமாக உழைத்தால் எல்லா துன்பங்களும் நீர் மேல் எழுத்துப் போல நீங்கும் என்பதை உணர்ந்ததால் உழைத்துச் சம்பாதித்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்.
  • பெருமழையால் வெள்ளம் ஏற்பட்ட போது, யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல தங்களது இரண்டு வாகனங்களும் மூழ்கிவிடும் என உணர்ந்த மணி செய்வதறியாது கலங்கினார்.
  • நீலாயில் தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டபோது தம் உடமைகள் அனைத்தும் யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல சேதமைந்துவிடும் என்பதை மக்கள் உணர்ந்திருந்தாலும் செய்வதறியாது கலங்கி நின்றனர்.
  • நல்ல குடும்பத்தில் பிறந்த கவின் தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டு, நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல குடும்பத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தினார்.
  • பள்ளியிலேயே சிறந்த மாணவனாகத் திகழ்ந்த சந்திரன் தீய பழக்கம் கொண்ட தியாகுவுடன் பழகத்தொடங்கியதும் நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல அவனும் தீய பழக்கங்களுக்கு ஆளானான்.

உவமைத்தொடர் படிவம் 5

  • சுந்தர் பல்கலைகழகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியதால் அவன் படிப்பிற்காக அவன் பெற்றோர் செய்த செலவு விழலுக்கு இறைத்த நீர்போல் ஆனது.
  • வெளிநாட்டில் படிக்கச்சென்ற பிள்ளைகள் இருவரும் அங்கேயே தங்கிவிட்டதால் வயதான காலத்தில் அவர்களின் பெற்றோர் கொழுகொம்பற்ற கொடி போல் தனிமையில் தவிக்கின்றனர்.
  • ஒரு வாரத்தில் நடக்கவிருந்த மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள் காணாமல் போனபோது, அம்மா சிறகிழந்த பறவை போல் செய்வதறியாது கண்கலங்கி நின்றார்.
  • அந்தக் குடும்பத் தலைவரின் மறைவுக்குப் பின்னர், வெளி உலகமே தெரியாமல் வளர்க்கப்பட்ட அவரது பிள்ளைகள் மாலுமி இல்லாத கப்பல் போல் செய்வதறியாது சிரமப்பட்டனர்.
  • எங்கள் பந்து விளையாட்டுப் பயிற்றுனர் ஒப்பந்த காலம் முடிந்து தம் சொந்த நாடு சென்று விட்டதால் நாங்கள் மாலுமி இல்லாத கப்பல் போல் தடுமாறுகிறோம்.
  • அந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகைமை நீறு பூத்த நெருப்பாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அந்நாடுகளுக்கிடையே போர் மூளலாம் என்பது அனைவரும் அறிந்ததே.

மரபுத்தொடர் படிவம் 4

  • முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் எங்கள் ஆசிரியர் நிறைகுடம் தளும்பாது என்பதற்கொப்ப எல்லோரிடமும் ஆரவாரமின்றி / சகஜமாகப் பழகுவார்.
  • உதவி என்று கேட்டு வரும் ஏழை மக்களுக்கு மனம் கோணாமல் உதவி செய்யும் திரு. சுப்பையாவின் பண்பு  கருணைக் கடலுக்கு ஒப்பாகும்.
  • தான் சிறுவயது முதல் பரதம் கற்றுக் கொண்டிருப்பதாக சக தோழிகளிடம் தம்பட்டம் அடித்து வந்த நளினி, பள்ளி இலக்கிய விழா நடனப் போட்டியில் ஆடத்தெரியாமல் நின்றபோது அவளது சாயம் வெளுத்ததால் வெட்கித் தலைகுனிந்தாள்.
  • நூறு ரிங்கிட் முதலீடு செய்தால் அப்பணத்தை  ஆயிரமாக மாற்றித் தருவதாகச் சொல்லி அனைவர் காதிலும் பூ வைத்ததால் மக்கள் அனைவரும் உண்மை அறிந்து ரங்கனை அடித்து உதைத்தனர்.
  • வீட்டுப்பாடங்களை ஒழுங்காகச் செய்து வரும் மாணவர்களை ஆசிரியை மங்கை தட்டிக் கொடுத்துப் பாராட்டுவதால் அவரது மாணவர்கள் அனைவரும் வீட்டுப்பாடங்களைத் தவறாது செய்து வருகின்றனர்.

மரபுத்தொடர் படிவம் 5

  • உழைப்பாளியான சங்கர் தொழில் தொடங்கி ஒரே வருடத்தில் வீடு, வாகனம் வாங்கியதைக் கண்டவர்களுக்கு அவன் தொழிலில் நன்றாக சம்பாதிக்கிறான் என்பது வெள்ளிடைமலையாகத் தெரிந்தது.
  • சிறந்த தேர்ச்சியைப் பெற விரும்பும் மாணவர்கள் பாடங்களைக் குறிப்பெடுத்துப் படிப்பதுடன் நிறைய பயிற்சிகளைச் செய்தால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும் என்பது வெள்ளிடைமலை.
  • ரவி தன் கடையில் விலை குறைந்த கைப்பேசியை அதிக விலைக்கு விற்றுவிட இனிப்புக் காட்டிப் பேசியதை அறிந்த வாடிக்கையாளர் அக்கடையை விட்டு வெளியேறினார்.
  • யார் என்ன சொன்னாலும் ஒத்துப் பாடும் வள்ளியின் கருத்திற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்காததால் அவள் தன் தவற்றை உணர்ந்து வெட்கப்பட்டாள்.
  • நல்ல நட்புக்கு அழகு, நண்பர் என்ன சொன்னாலும் ஒத்துப் பாடாமல் சரியான கருத்தை வலியுறுத்துவதாகும் என்பதை நன்கு உணர்ந்த விமலா, யார் என்ன சொன்னாலும் அதனைச் சீர்தூக்கிப்பார்த்தே விளக்கமளிப்பார்.
  • கணக்குப் பாடத்தின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொண்டு பயிற்சியும் முயற்சியும் செய்ததால் கோமதியால் கணிதத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறமுடிந்தது.
  • வீட்டிலிருந்து உணவு அனுப்பும் தொழிலை ஆரம்பிக்கும் முன் அதில் வெற்றி பெறத் தேவையான நெளிவு சுளிவுகளைச் சில இடங்களில் வேலை செய்து பெற்றதால் அமுதன் இன்று அத்தொழிலில் வெற்றி நடை போடுகிறார்.
  • தமது தாயின் உடல் நலக்குறைவுக்கு ஒய்வு ஒழிச்சல் இல்லாது வேலை செய்ததே காரணம் என்று உணர்ந்த பிள்ளைகள் இப்போது அவரை ஓய்வெடுக்க வைத்து நன்றாகப் பார்த்துக் கொள்கின்றனர்.

****************************************************