Home நாடு யுனேஸ்வரன், எஸ்பிஎம் மாணவர்களுக்கு தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் அன்பளிப்பு

யுனேஸ்வரன், எஸ்பிஎம் மாணவர்களுக்கு தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் அன்பளிப்பு

344
0
SHARE
Ad

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன்
எஸ்பிஎம் மாணவர்களுக்கு தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்

இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்கும் ஜோகூர் சிகாமாட் வட்டாரத்தில் உள்ள இந்திய மாணவர்களுக்கு உதவும் பொருட்டு சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆர்.யுனேஸ்வரன் தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி நூல்களை இலவசமாக வழங்கி உள்ளார்.

செவ்வாய்க்கிழமை, 5 செப்டம்பர் 2023 சிகாமாட்டில் உள்ள தனது சேவை மையத்தில் அந்த வட்டார எஸ்பிஎம் தமிழ் மொழி ஆசிரியர்களிடம் அந்த நூல்களை யுனேஸ்வரன் நேரடியாக வழங்கினார். சிகாமாட் வட்டாரத்தில் இந்த ஆண்டு எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு எழுதும் மாணவர்களும், 4-ஆம் படிவ மாணவர்களுக்கும் இந்த நூல்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

தமிழ் மொழி ஆசிரியர்கள் நூல்களைப் பெற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய யுனேஸ்வரன், “இந்திய சமுதாயம் கல்வியில் சிறக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் விதத்திலும், 2023-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தமிழ் மொழி தேர்வு எழுதவிருப்பவர்கள், தற்போது 4-ஆம் படிவம் படித்துக் கொண்டிருக்கும் அடுத்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் என சிகாமாட் வட்டாரத்திலுள்ள அனைத்து இந்திய மாணவர்களுக்கும் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” என்னும் நூலை இலவசமாக வழங்க முன்வந்தேன். இதன் மூலம் எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்க தமிழ் மாணவர்களை ஊக்குவிப்பதும் எனது நோக்கம்” எனத்  தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த நூலை மாணவர்கள் தங்களின் எஸ்பிஎம் தமிழ் மொழி ஆசிரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” என்ற இந்த நூலைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. எஸ்பிஎம் தமிழ் மொழியைக் கற்பிப்பதில் 30 ஆண்டுகாலத்திற்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட விக்னேஸ்வரி சாம்பசிவம் இந்த எஸ்பிஎம் தேர்வு வழிகாட்டி நூலை உருவாக்கியுள்ளார்.

சிகாமாட் வட்டார மாணவர்களுக்கு இந்த நூல்களை வழங்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஆசிரியர் திரு.ரமணி நூல்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சிகாமாட் வட்டார மாணவர்கள், ஆசிரியர்கள் சார்பில் யுனேஸ்வரனுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அடுத்த மாதம் எஸ்பிஎம் மாணவர்களுக்கான முன்னோட்டத் தேர்வுகள் நடைபெறவிருப்பதால், தக்க தருணத்தில் இந்த நூல்கள் மாணவர்களுக்கு கிடைத்துள்ளன – இதனால் அவர்களும் மீள்பார்வை செய்யவும், தேர்வுக்குத் தயாராகவும் – இந்த நூல்கள் மிகவும் பயனாக இருக்கும் – எனவும் ரமணி தெரிவித்தார்.

இதுவரை நூல்களை பெற்றுக் கொள்ளாத சிகாமாட் வட்டார ஆசிரியர்கள் கீழ்க்காணும் முகவரியில் உள்ள யுனேஸ்வரன் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சேவை மையத்தில் நேரில் வந்து நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

Pusat Khidmat Rakyat Parlimen Segamat
No: 40 & 40A, Jalan Bistari 1/1
Taman Yayasan, Buloh Kasap
85010
, Segamat
Johor (Tel :  +60 10-2348295 வெனிஷா அல்லது பத்மநாபன்)