மாஸ்கோ: ரஷியாவுக்கான வருகையின் ஒரு பகுதியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மாஸ்கோ அரசாங்கத்தின் அனைத்துலக வெளியுறவுத் தொடர்புகளுக்கான கழகத்தில் பொது உரை ஒன்றை நிகழ்த்தினார். அவரின் உரையை ரஷியர்கள் பெருமளவில் திரண்டு வந்து கேட்டு இரசித்தனர்.
அன்வாருடன் ரஷிய வருகை மேற்கொண்டிருக்கும் மலேசிய அமைச்சர்களுடன் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரனும் அன்வாரின் உரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
“நிலைகுலைந்த காலகட்டத்தில் உலகத்தை இணைக்கும் பாலம்” என்ற தலைப்பில் அன்வார் உரையாற்றினார்.

இந்த உரை நிகழ்ச்சியை பேராசிரியர் அனாடொலி தோர்குனோவ் தலைமையேற்று நடத்தினார். மாஸ்கோ அரசாங்கத்தின் அனைத்துலக வெளியுறவுத் தொடர்புகளுக்கான கழகம், மலாயாப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட மற்ற மலேசிய கல்விக் கழகங்களுடன் ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறது என்பது குறித்தும் மலேசியப் பேராளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அன்வாருக்கு மாஸ்கோ அரசாங்கத்தின் அனைத்துலக வெளியுறவுத் தொடர்புகளுக்கான கழகம், உலக அமைதிக்காக ஆற்றிய பங்களிப்புக்காக அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கி சிறப்பித்தது.