Home Featured நாடு நாளை கலவரம் ஏற்படுமா? – பெட்டாலிங் ஸ்ட்ரீட் வியாபாரிகள் அச்சம்!

நாளை கலவரம் ஏற்படுமா? – பெட்டாலிங் ஸ்ட்ரீட் வியாபாரிகள் அச்சம்!

677
0
SHARE
Ad

Petaling streetகோலாலம்பூர் – நாளை கலவரம் ஏற்படும் என சிவப்புச் சட்டைப் பேரணியினர் விடுத்துள்ள அச்சுறுத்தலால் பெட்டாலிங் ஸ்ட்ரீட் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து கோலாலம்பூர் நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஆங் சே டி கூறுகையில், 773 வர்த்தகர்களில் 400 பேர் வரை அச்சத்தில் உள்ளனர். செப்டப்மர் 16-ம் தேதி நடந்தது போல் நாளை பேரணி நடக்கக் கூடும் என அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

“நாளை கடையடைப்பதா? என உறுப்பினர்கள் கேட்கிறார்கள். வியாபாரம் பாதிக்கப்படும் என அஞ்சுகிறார்கள். காவல்துறையில் புகார் அளிக்கும் படி அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளேன். நாங்கள் அஞ்சுகிறோம் காரணம் நாங்கள் தொழில் செய்கிறோம்” என்று ஆங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நாங்கள் போலியான பொருட்களை விற்கிறோம் என்றால், எங்கள் மீது நடவடிக்கை எடுக்க சிவப்புச் சட்டைப் பேரணியினருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் அது மற்ற அதிகாரிகளின் கடமை என்றும் ஆங் தெரிவித்துள்ளார்.

சிவப்புச் சட்டைப் பேரணியினர் கூறும் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், நாளை மற்றொரு பேரணி நடத்துவோம் என சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோ ஜமால் முகமட் யூனோஸ் கடந்த புதன்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் போலியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், அமைச்சு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த வியாபாரிகள் தங்களுக்கு வரும் வருமானத்தில் மற்ற இனத்தவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சிவப்புச் சட்டைப் பேரணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, பெட்டாலிங் ஸ்ட்ரீட் பகுதி முழுவதையும் சீன வர்த்தகர்கள் ஆக்கிரமித்திருப்பதை அவர்கள் எதிர்க்கின்றனர்.