நியூயார்க்- ஐ.நா. பொதுப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புதன்கிழமை காலை நியூயார்க் சென்றடைந்தார். உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் அவர் பயணம் மேற்கொண்ட விமானம் அங்கு தரையிறங்கியது.
ஐ.நா.வின் 70ஆவது பொதுப் பேரவையில் பங்கேற்பதற்காக 9 நாள் பயணமாகச் சென்றுள்ளார் நஜிப். நியூயார்க் சென்றடைந்த பிரதமர் தம்பதியரை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிஃபா அமானும், அமெரிக்காவுக்கான மலேசிய தூதர் டத்தோ டாக்டர் அவாங் அடேக் ஹுசேனும், ஐ.நா.,வுக்கான மலேசியாவின் நிரந்தரப் பிரதிநிதி டத்தோ ரம்லான் இப்ராகிமும் வரவேற்றனர்.
இந்தப் பயணத்தின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார் நஜிப்.
மேலும் அக்டோபர் 1ஆம் தேதியன்று ஐ.நா. கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
அமெரிக்க அதிபர் ஓபாமா தலைமையில் நடைபெற உள்ள ஐ.நா. அமைதி மாநாட்டிலும் இம்மாதம் 28ஆம் தேதி அவர் உரையாற்றுவார்.
இந்தப் பயணத்தின்போது அமெரிக்காவில் உள்ள மலேசிய மாணவர்களை பிரதமர் நஜிப் சந்திக்க உள்ளார். மேலும் மலேசிய அமைச்சர்களுடன், அமெரிக்க வர்த்தகர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.