கோலாலம்பூர் – அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது கடந்த ஒரு வருடமாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், எதிர்வரும் டிசம்பர் 10-ம் தேதி துவங்கப்படவிருக்கும் அம்னோ பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி கூறுகையில், “முன்னாள் கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் என்ற முறையில் அவர் மீது கட்சி இன்னும் மரியாதை வைத்துள்ளது. எனவே அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என நம்புகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
“கண்டிப்பாக விரைவில் அவருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைப்போம். ஆனால் அதை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்”
“பெரும்பாலான அம்னோ உறுப்பினர்கள் இன்னும் அவரைப் பாராட்டி வருவதோடு, மாறுபட்ட அவரது கருத்துகளுக்கும் மதிப்பளித்து வருகின்றனர்” என்று ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.