Home Featured இந்தியா அரசியல் பார்வை: ஒரு நாடாளுமன்ற உரை – ஒரு தேநீர் விருந்து – இந்திய அரசியலையே...

அரசியல் பார்வை: ஒரு நாடாளுமன்ற உரை – ஒரு தேநீர் விருந்து – இந்திய அரசியலையே திசை திருப்பிய மோடியின் சாணக்கியம்!

656
0
SHARE
Ad

புதுடில்லி – (நேற்று, இரண்டே சம்பவங்களின் மூலம் எவ்வாறு சூடேறிக் கொண்டிருந்த புதுடில்லி அரசியலின் தாக்கத்தை நரேந்திர மோடி தணித்தார் என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் பார்வை)

கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து, நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட உரைகள், தொலைக்காட்சி தகவல் ஊடகங்களில் நடத்தப்பட்ட விவாதங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்திய நாடாளுமன்றம் களேபரமாகப் போகின்றது, பெரும் போராட்டம் வெடிக்கப் போகின்றது, பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையில் மோதல் விசுவரூபம் எடுக்கப் போகின்றது என்றெல்லாம் ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

Modi-tea with Manmohan Singh-Sonia-மோடி வழங்கிய தேநீர் விருந்தில் – சோனியா, மன்மோகன் சிங், மோடி, அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு…

#TamilSchoolmychoice

அரசாங்கம், ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற உறுதி பூண்டிருந்த வேளையில், காங்கிரஸ் அதற்கு சில எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தது.

நாடாளுமன்றத்தில் பாஜக மிகப் பெரிய பெரும்பான்மை கொண்டிருந்தாலும், இந்திய நாடாளுமன்ற மேல்சபையில் (ராஜ்யசபா) இன்னும் காங்கிரசுக்கு பெரும்பான்மை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்நிலையில் ராஜ்யசபாவில் காங்கிரசும் மற்ற எதிர்க்கட்சிகளும் பொருள்சேவை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அதன் பின்னர் அந்த மசோதா நிறைவேற்றப்பட முடியாமல் – சட்டமாக்கப்பட முடியாமல் சிக்கிக் கொள்ளும் அபாய நிலைமை ஏற்பட்டு விடும்.

முதல் அஸ்திரம் – தேநீர் விருந்து

manmohan-singhஇந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்க தனது முதல் அஸ்திரத்தைப் பிரயோகித்தார் மோடி. முன்னாள் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இருவரையும் தனது அதிகாரபூர்வ இல்லத்திற்கு நேற்று தேநீர் விருந்திற்கு அழைத்தார் மோடி.

இந்தியத் தகவல் ஊடகங்கள் இதனைப் பெரிதுபடுத்த, வேறு வழியில்லாமல் மன்மோகன் சிங்கும், சோனியாவும் நாட்டு நலனுக்காக பிரதமரைச் சந்திக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்.

மோடியின் அழைப்பை அவர்கள் மறுத்திருந்தால், வேண்டுமென்றே அவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றார்கள் என்ற தோற்றமே ஏற்பட்டிருக்கும். மக்கள் மத்தியில் அவர்களின் ஆதரவும் மேலும் மோசமாக சரிந்திருக்கும்.

அதே வேளையில், இந்த தேநீர் விருந்து அழைப்பால், பாருங்கள் மோடியை! தனக்கு பெரும்பான்மை இருந்தும், பிரதமராக இருந்தும், எவ்வளவு சமாதானமாகப் போகின்றார் என்பது போன்ற தோற்றம் மோடிக்கு ஏற்படுத்தப்பட்டது.

இரண்டாவது அஸ்திரம் – நாடாளுமன்ற உரை 

Narendra Modi-speaking in Parliamentநேற்று நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றியபோது…

தேநீர் விருந்து விவகாரம், தகவல் ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த அதே தருணத்தில், அதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் பொருள் பொதிந்த, உணர்ச்சிகரமான, உரையொன்றை ஆற்றினார் பிரதமர். இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் குறித்து உணர்ச்சிமயமான அவரது உரையில் தவறாகவோ, குறை சொல்லும் விதத்திலோ எதுவுமே இல்லை என தகவல் ஊடகங்கள் அவருக்கு பாராட்டு மழை பொழிந்திருக்கின்றன.

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் தந்தையாகப் போற்றப்படும் டாக்டர் அம்பேத்காருக்கு உணர்ச்சிகரமான அஞ்சலியைச் செலுத்தினார். மோடி. தனது சொந்த வாழ்க்கையில் எத்தனையோ அவமானங்களையும், இழிசொல்லையும் சந்தித்த அம்பேத்கார், அவற்றையெல்லாம் மீறி, நாட்டுக்காக வழங்கிய மாபெரும் கொடை இந்திய அரசியல் சாசனம் என்று முழங்கிய மோடி “இந்தியா என்பதே ஒரே மதம்தான் – இந்திய அரசியல் சாசனம்தான் அதன் மதநூல்” என்று உரக்கச் சொன்னார்.

PM-Modi-invites-Sonia-Gandhiதனக்கு நேர்ந்த கசப்பான சம்பவங்களை அரசியல் சாசனத்தில் பிரதிபலிக்காமல் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக அதனை உருவாக்கிய அம்பேத்காரின் நேர்மையையும் மோடி தனது உரையில் பாராட்டினார்.

கடந்த காலத்தில் நாட்டு பிரதமர்கள் அனைவரும் நமது நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட்டிருக்கின்றார்கள் என ஒப்புக் கொண்டார் மோடி. குறிப்பாக, நேருவின் தியாகங்களை மிகவும் போற்றினார். இது காங்கிரஸ்காரர்களின் கொஞ்ச நஞ்ச கோபத்தையும் தணித்தது.

“மதம், இனம், ஜாதி இவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இந்தியாதான் முதல்” என்றும் முழக்கமிட்ட மோடி, பெரும்பான்மை இருக்கின்ற காரணத்தால், ஆணவத்துடன் எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்றும் அமைதிக் கொடியை இன்னொரு புறம் காட்டினார்.

ராகுல் காந்திக்கு தேநீர் விருந்திற்கு அழைப்பில்லை

rahul_gandhiநாடாளுமன்ற உரைக்குப் பின்னர் தனது இல்லத்தில் மோடி வழங்கிய தேநீர் விருந்தில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் வெங்கையா நாயுடுவும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் கலந்து கொண்டனர்.

சாமர்த்தியமாக இந்த விருந்துக்கு ராகுல் காந்தியை அழைப்பதை மட்டும் தவிர்த்து விட்டார் மோடி. இதன் மூலம், ராகுல் காந்தி இதற்குப் பிறகு எதுவும் எதிர்மறையாக சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு மோடி அவரைத் தள்ளிவிட்டார் – இதுவும் அவரது அரசியல் சாணக்கியத்தனத்திற்கான மற்றொரு சான்று என்கின்றார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதன் மூலம், பொருள்சேவை வரியினால் ஏற்படவிருந்த நாடாளுமன்ற மோதல்கள் ஏறக்குறைய தவிர்க்கப்பட்டு விட்டதாகவே பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மன்மோகன் சிங்கும், சோனியாவும் தெரிவித்த சில கருத்துக்களையும், திருத்தங்களையும் மோடி கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த ஒரு வாரமாக மலேசியா, சிங்கப்பூர் என சுற்றி வந்து, வெளிநாட்டு இந்திய வம்சாவளியினரைக் கவர்ந்த மோடி, நாடு திரும்பியதும், அவருக்குப் பெரும் தலைவலி காத்திருக்கின்றது, குளிர்கால நாடாளுமன்றத் தொடர் அவருக்கு பெரும் எதிர்ப்புகளைக் கொண்டு வரப் போகின்றது என்றெல்லாம் இந்தியத் தகவல் ஊடகங்கள் கனவு கொண்டிருந்தன.

ஆனால், அவற்றையெல்லாம் ஒரே நாளில் தனது சாணக்கியத்தனத்தால் முறியடித்து விட்டார் மோடி.

தனது அரசியல் எதிரிகளை அழைத்து ஒரு தேநீர் விருந்து – உணர்ச்சிகரமான ஒரு நீண்ட நாடாளுமன்ற உரையில் – தனது பேச்சாற்றல் மூலம் – அனைத்து தரப்புகளையும்  திருப்திப்படுத்தியது –

என இந்த இரண்டு சம்பவங்களால், இந்திய அரசியலின் போக்கையே ஒரே நாளில் திசை திருப்பி விட்டார் மோடி!

-இரா.முத்தரசன்