கோலாலம்பூர் – தனது சகோதரர் சார்லஸ் சுரேசைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்யும் படி அவரது இளைய சகோதரர் டத்தோ ரிச்சர்டு மொராயிஸ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இவர்களின் சகோதரரும், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞருமான கெவின் மொராயிஸ் கொலை தொடர்பில் அண்மையில், சார்லஸ் சுரேஸ் அளித்த சத்தியப் பிரமாணத்தில் ரிச்சர்ட் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், சார்லஸ் சுரேசுக்கு எதிராக நேற்று கருத்துத் தெரிவித்துள்ள ரிச்சர்டு அவரை “தேசியக் குற்றவாளி” எனப் பெயரிட்டுள்ளதோடு, தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கறிஞர் அமெரிக் சித்து மூலமாக சார்லஸ் அமெரிக்கா சென்று விட்டதை அறிந்து கொண்ட ரிச்சர்டு, அவரை மலேசியாவிற்கு நாடு கடத்தும் படி, அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நான் நம்புகிறேன்.. நீங்கள் என்னை குறிப்பிட வேண்டும், அவர் ஓடிவிட்டால், டத்தோ (ரிச்சர்டு) பிரதமரிடம் பேசி அவரை நாடுகடத்துவேன்” என்று நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.
“நான் என்னுடைய தொடர்புகளைப் பயன்படுத்தி அவரை மீண்டும் மலேசியாவுக்கே நாடு கடத்துவேன். அவர் இன்னும் மலேசியர் தான்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ரிச்சர்டு இன்று சார்லஸ் மீது காவல்துறையில் புகார் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டு சகோதரர்கள் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், கெவின் மொராயிஸ் கொலை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் என்னவென்பதில் மேலும் குழப்பமே நீடிக்கின்றது.
இவ்வழக்கில் இராணுவ மருத்துவர் உட்பட ஏற்கனவே 6 பேர் மீது கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சார்லஸ் அளித்த சத்தியப் பிரமாணம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.