கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மூலமாக நியூயார்க்கில் உள்ள கட்டடம் ஒன்றை புதுப்பிக்கும் பணி எதையும் தாம் பெறவில்லை என பிரதமரின் மருமகன் டானியார் கேசிக்பாயேவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தாம் அவ்வாறு ஓர் ஒப்பந்தத்தைப் பெற்றதாக தகவல் வெளியிட்ட ஜசெக எம்பி முகமட் ஆரிஃப் சப்ரி அப்துல் அசிஸ், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தனது வழக்கறிஞர்கள் மூலம் டானியார் கோரியுள்ளார். மேலும் முகமட் ஆரிஃப் மீது அவர் காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.
“எனது கட்சிக்காரர் பிரதமரால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தைப் பெற்றார் என முகமட் ஆரிஃப் சப்ரி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவர் உரிய ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும். இத்தகையதொரு தகவலை அவர் எங்கிருந்து பெற்றார் என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஆரிஃப், எனது கட்சிக்காரரை மட்டுமல்லாமல் மலேசியப் பிரதமரையும் தமது வலைதளப் பதிவில் இழிவுபடுத்தி உள்ளார்,” என டானியாரின் வழக்கறிஞர் நூர்ஹஜ்ரன் முகமட் நூர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 24ஆம் தேதி தனது வலைப்பக்கத்தில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், ஐ.நா.வுக்கான மலேசியாவின் நிரந்தரப் பிரதிநிதி நியூயார்க் நகரில் வசிக்கும் கட்டடம் மிகப் பெரிய மாற்றங்களுடன் புதுப்பிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பணிக்கான ஒப்பந்தத்தை டானியார் பெற்றுள்ளதாகவும் அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
“பிரதமரின் மருமகனான தனக்குள்ள நன்மதிப்பை குலைக்கும் நோக்கத்துடன் அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் குறித்தும் அவதூறுகளை சித்தரித்துள்ளது. மேலும் கோடீஸ்வரர் ஜோ லோவுடன் எனது கட்சிக்காரர் டானியாரை தொடர்புபடுத்தி தனது வலைப்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் ஆரிஃப். ‘சங்மோங்கோல் ஏகே47’ என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரை பின்னர் ‘மலேசியா குரோனிக்கல்ஸ்’ ஊடகத்தில் வேறொரு தலைப்பில் வெளியிடப்பட்டது. அவர் எழுப்பியுள்ளது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டு” என்று நூர்ஹஜ்ரன் மேலும் தெரிவித்தார்.