Home Photo News அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -7 : டிரம்ப் வெற்றி பெற்றால் எழப் போகும் சட்ட...

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -7 : டிரம்ப் வெற்றி பெற்றால் எழப் போகும் சட்ட சிக்கல்கள்! மாறப்போகும் அமெரிக்க, உலக அரசியல்!

163
0
SHARE
Ad

(இன்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் முடிவுகள் அமெரிக்க நாட்டின் தலையெழுத்தை மட்டுமின்றி, உலக அரசியல் அரங்கிலும் மாற்றங்களை ஏற்படுத்தவிருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் – என்ற கட்டுரைத் தொடரில் 7-வதாக மலரும் இந்தக் கண்ணோட்டத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறக் கூடிய சட்ட சிக்கல்கள் குறித்து விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)

  • 2 பில்லியன் டாலருக்கும் மேல் கடன் வைத்திருக்கும் டிரம்ப்
  • தோல்வியடைந்தால் மீண்டும் வன்முறைப் போராட்டத்தை டிரம்ப் தொடங்குவாரா?
  • டிரம்ப் வெற்றி பெற்றால் அவர் மீதான வழக்குகள் நிலைமை என்ன?
  • கமலாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கிய நடிகை ஜெனிபர் லோப்பஸ்
  • தீபாவளி வாழ்த்து தெரிவித்த டிரம்ப் – கமலா!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5-ஆம் தேதியோடு முடிவடைந்து விடும். எழுந்திருக்கும் கேள்வி, டிரம்ப் தோல்வியடைந்தால் அமைதியாக மக்கள் முடிவுகளை ஏற்றுக் கொண்டு தோல்வியை ஒப்புக் கொள்வாரா?

அல்லது கடந்த முறைபோல் தன் ஆதரவாளர்களைக் கொண்டு, தேர்தலில் மோசடிகள், முறைகேடுகள் நடந்துவிட்டன என வன்முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவாரா?

#TamilSchoolmychoice

சில வாக்களிப்பு மையங்களில் தேர்தல் மோசடிகள் நடைபெறுகின்றன என பரபரப்பாகக் குற்றம் சாட்டியுள்ளார் டிரம்ப்.

வெளிநாடுகளில் இருந்து வரும் – குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் சட்டவிரோதக் குடியேறிகளைக் குறிவைத்து மோசமான, தரக்குறைவான முறையில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் டிரம்ப்.

இதனால் ஹிஸ்பானிக்ஸ் என்னும் தென் அமெரிக்க – ஸ்பானிஷ் மொழி பேசும் – வாக்காளர்களின் ஆதரவை டிரம்ப் இழப்பார் என்றாலும், ஆதிக்க மனப்போக்கு கொண்ட வெள்ளையர்களின் வாக்குகளை அள்ளுவார் என்பது கணிப்பு.

கமலாவுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்த
ஜெனிப்பர் லோப்பஸ்

ஜெனிபர் லோப்பஸ்

ஜெனிப்பர் லோப்பஸ் சற்று வயதானாலும் அழகான – இன்னும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள பாடகி-நடிகை. அவரின் கவர்ச்சித் தோற்றங்களும், வரிசையாக காதலர்களை மாற்றும் ஆளுமையும் ஹாலிவுட் வட்டாரங்களில் எப்போதும் பேசுபொருள். சுருக்கமான ஜேலோ என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.

ஜெனிபர், நெவாடா மாநிலத்தில் நடைபெற்ற கமலாவுக்கான பிரச்சாரத்தில் கலந்து கொண்டு நெகிழ்ச்சியாக கண்கலங்கும் விதத்தில் பேசியுள்ள காணொலி  அண்மையில் பிரபலமாகி அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

நாம் அனைவரும் அமெரிக்கர்கள்-ஏன் நமக்குள் இன ரீதியான பாகுபாடு – எனக் கூறியிருக்கும் ஜெனிபர், டிரம்ப் தென் அமெரிக்கர்களுக்கு எதிராக குறிப்பாக புவர்ட்டோ ரிக்கோ நாட்டினரைக் குறிவைத்துப் பேசிய வார்த்தைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெனிபரும் புவர்ட்டோ ரிக்கோ நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் 2 பில்லியன் டாலர் கடனாளியா?

அமெரிக்க அதிபருக்குப் போட்டியிடும் டிரம்ப் குற்றவாளியாக நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டவர் என்பது ஒருபுறமிருக்க தற்போது இன்னொரு சர்ச்சையும் சேர்ந்துள்ளது. அவர் 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் கடனாளியாக உள்ளார் என்பதுதான் அந்த சர்ச்சை.

சில வழக்குகளில் அவர் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகைகள், அவர் எதிர்நோக்கும் வழக்குகளுக்கான வழக்கறிஞர் கட்டணங்கள், வங்கிக் கடன்கள் இப்படியாகப் பலவற்றைக் கணக்கிட்டு அவர் தற்போது செலுத்த வேண்டிய மொத்தக் கடன்களின் மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்வளவு கடன்களோடு அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடுகிறார் டிரம்ப். அவரின் சில சொத்துகளை விற்பதன் மூலம்தான் அவரின் கடன்களை அவரால் அடைக்க முடியும் என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அதுமட்டுமல்ல! இந்தக் கடன்களும் அதற்கான வட்டிகளும் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், நாளடைவில் இதன் மதிப்பு மேலும் கூடும் என்றும் ஊடகங்கள் கணித்துள்ளன.

வெள்ளை மாளிகையில் தீபாவளி

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்

ஓர் அடையாளக் கொண்டாட்டமாக, வெள்ளை மாளிகையில் சிறிய அளவில் தொடங்கிய தீபாவளிக் கொண்டாட்டம் இப்போது மிக விரிவான அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி இதுவரையில் இல்லாத அளவுக்கு பெரிதாகக் கொண்டாடப்படுவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை தீபாவளிக் கொண்டாட்டத்தில் கமலா ஹாரிசும் கலந்து கொண்டு அமெரிக்கா வாழ் இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதிபர் தேர்தலின் மற்றொரு போட்டியாளரான டொனால்ட் டிரம்பும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வாழ் இந்துக்களை இடது சாரி தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பேன் என உறுதியளித்துள்ள டிரம்ப், வங்காளதேசத்தில் இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் எதிரான வன்முறைகளை கமலா ஹாரிசும், ஜோ பைடனும் கண்டு கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர் – எனது பார்வையின் கீழ் இப்படியெல்லாம் நடந்திருக்காது – என்றும் தனது தீபாவளி செய்தியில் தெரிவித்தார்.

மாறப்போகும் அமெரிக்க – உலக அரசியல் களம்

நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு என்றாலும், முன்கூட்டியே வாக்களிக்கும் வழக்கம் அமெரிக்காவில் இருப்பதால், பெரும்பாலோர் நவம்பர் 5-க்கு முன்பாகவே வாக்களித்து விட்டனர். இதுவரையில் 78.9 மில்லியன் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்து விட்டனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிப்பு நாளுக்கு முன்பாக மொத்த வாக்காளர்களில் 54 விழுக்காட்டினர் தங்களின் வாக்குகளைச் செலுத்தி விடுவார்கள் எனக் கணிக்கப்படுகிறது.

குடியரசுக் கட்சியினரைவிட ஜனநாயகக் கட்சியினர் இந்த முறை வாக்களிப்பதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவையும் உலகையும் மாற்றப் போகும் தேர்தல்

இஸ்ரேல்-ஹாமாஸ் மோதல், ஈரான்-இஸ்ரேல் பதிலடித் தாக்குதல்கள், உக்ரேன் போர் – என இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக மோசமான போர் சூழலில் உலகம் தற்போது சிக்கியுள்ளது. ஜோ பைடனால் இந்த சர்ச்சைகளில் தீர்க்கமான முடிவு எடுக்க முடியவில்லை. அவர் மீண்டும் அதிபராகப் போட்டியிடவில்லை என்பதால், பலவீனமான அதிபராக செயல்படுகிறார். முதுமையும் மறதி நோயும் அவரை வாட்டுவதால், உடல்நல ரீதியாகவும் அவரால் துடிப்புடன் செயல்பட முடியவில்லை.

எனவே, அடுத்து வரப்போகும் அமெரிக்க அதிபரால், அமெரிக்க நாட்டின் வாழ்க்கை முறை மட்டுமல்ல – உலக நடப்புகளும் மாறும் அளவுக்கு – பல தீர்க்கமான, ஆக்ககரமான முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டிரம்ப் வழக்குகள் என்னவாகும்?

அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற ஆர்வத்தை விட, டிரம்ப் வெற்றி பெற்றாலோ, தோல்வியடைந்தாலோ அவரின் வழக்குகளின் நிலைமை என்ன என்பதுதான் தற்போது அமெரிக்காவைச் சுழன்றடிக்கும் கேள்வி!

அவர் மீது சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்ட 34 குற்றச்சாட்டுகள் மீதிலான தண்டனை வழங்க, நீதிமன்றம் நவம்பர் 26-ஆம் தேதியை நிர்ணயித்திருக்கிறது. அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுமா? அல்லது அபராதம் மட்டும் விதிக்கப்படுமா? என்ற சட்ட விவாதங்கள் தொடர்கின்றன.

டிரம்புக்கு எதிரான தண்டனையை தாமதப்படுத்த அவரின் வழக்கறிஞர் குழுவினர் தீவிரமாக வியூகம் வகுத்து வருகின்றனர்.

டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், அதன்பிறகு அவர் மீதான தண்டனையை நிர்ணயிக்கும் தீர்ப்பு அவர் பதவியேற்கும் ஜனவரி 20-க்குப் பிறகு ஒத்தி வைக்கப்படலாம். அப்படிச் செய்தால் அமெரிக்க அதிபராக தன் மீதான தண்டனையை அவரால் ரத்து செய்ய முடியும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அவருக்கு எத்தகைய தண்டனை வழங்கப்பட்டாலும் அவரின் 4 ஆண்டுகால ஆட்சி முடிந்ததும்தான் – அந்தத் தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என டிரம்பின் வழக்கறிஞர்கள் வாதாடலாம் என சில சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அப்படி நடந்தால் டிரம்ப் தனது 82-வது வயதில்தான் தனக்கான தண்டனையை அனுபவிக்கத் தொடங்குவார்.

அமெரிக்க வரலாற்றில் இதற்குமுன் டிரம்ப் எதிர்கொள்ளும் சம்பவங்கள் போன்று நடந்ததில்லை என்பதால் நீதிபதி எத்தகைய தீர்ப்பை வழங்குவார் என்பது குறித்து மேற்கோள் காட்ட யாராலும் இயலவில்லை.

இப்படி பல சட்ட சிக்கல்களைக் கொண்ட அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் – அவர் வெற்றி பெற சாதகமாக அமைந்த அம்சங்கள் என்ன – அவருக்கு முன்னே அமெரிக்காவிலும், உலக அளவிலும் குவிந்திருக்கும் சவால்கள் என்ன – என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

-இரா.முத்தரசன்