கோலாலம்பூர் – அம்னோவிலிருந்து வெளியேறியிருக்கும் துன் மகாதீர், அம்னோ-தேசிய முன்னணிக்கு எதிராகவும், பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராகவும் இயங்கிக் கொண்டிருக்கும் அரசியல் சக்திகளை ஒன்றிணைக்கும் மாபெரும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கின்றார்.
மலேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக தனது பரம அரசியல் வைரியான துன் மகாதீருக்கு, தற்போது சிறையில் இருக்கும் அன்வார் இப்ராகிம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
அவரது சார்பில் பிகேஆர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் அன்வார் இப்ராகிம், பிரதமர் நஜிப் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ள, துன் மகாதீர், டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் அம்னோ எதிர்ப்பாளர்கள், மற்றும் சமூக இயக்கங்கள் அனைவருக்கும் தனது ஆதரவு உண்டு எனப் புலப்படுத்தியுள்ளார்.
“இந்த புரிந்துணர்வுக்கும், ஆதரவுக்கும் காரணம், பிரதமர் என்ற முறையில் இந்த நாட்டை வழிநடத்துவதில் தோல்வியடைந்து விட்ட நஜிப் பதவி விலக வேண்டும் என்ற அறைகூவல் மீது அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தனது சொந்த நலன்களுக்காக அரசாங்க நிர்வாக அமைப்பில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதோடு, நாட்டின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக, மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரிப்பதற்கும் நஜிப் காரணமாக இருக்கின்றார்” என்றும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாட்டின் முக்கிய அரசியல் அமைப்புகளை மோசமாக சிதைத்துள்ளார் நஜிப் என்றும் தெரிவித்த அன்வார் அந்த அமைப்புகளின் மறு சீர்திருத்தங்கள் நடைபெற வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.
மக்களின் உரிமைகள் மீண்டும் சுதந்திரமான, நேர்மையான தேர்தல்களின் வழி, அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அதே வேளையில் சுதந்திரமான நீதித்துறையும், கட்டுப்பாடற்ற தகவல் ஊடகங்களும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அன்வார் இப்ராகிம் மேலும் அறைகூவல் விடுத்துள்ளார்.