சியோல் : கடந்த டிசம்பர் மாதத்தில் (2024) இராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயற்சி செய்த தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோலை அண்மையில் கைது செய்ய முயற்சி செய்வதில் தோல்வி கண்ட தென் கொரிய அதிகாரிகள் தங்களின் இரண்டாவது முயற்சியில் வெற்றி கண்டனர்.
யூன் சூக் இயோலின் கைதைத் தொடர்ந்து தென் கொரிய அரசியல் எந்தத் திசையில் இனி செல்லும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ள.
கடந்த புதன்கிழமையன்று சுமார் 3,000 கலகத் தடுப்பு காவல் துறையினர் அவரின் அதிபர் இல்லத்தை முற்றுகையிட்டு அவரின் ஆதரவாளர்களுடன் முட்டி மோதி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். அதில் வெற்றியும் பெற்றனர்.
தென் கொரிய நாட்டை ஆளும் அதிபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். தற்போது அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
யூன் சூக் இயோலின் நம்பகத்தன்மைக்கு எதிரான வழக்கு இனி அரசியலமைப்பு நீதிமன்றத்தில் நடைபெறும். அவர் மீதான அதிபர் அதிகாரங்களை அவருக்கே மீண்டும் வழங்குவதா அல்லது அவரை அதிபர் பதவியில் இருந்து விலக்குவதா என தென் கொரிய அரசியலமைப்பு நீதிமன்றம் முடிவு செய்யும்.
இராணுவ ஆட்சியை அறிவித்ததைத் தொடர்ந்து அவர் மீதான ஊழல் விசாரணைகளும் இம்பீச்மெண்ட் என்னும் அவரின் நம்பகத்தன்மைக்கு எதிரான விசாரணைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய வகையில் இராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயற்சி செய்த தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோல் மீதான கைது நடவடிக்கை கடந்த ஜனவரி 3-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தது.
டிசம்பர் தொடக்கத்தில் ராணுவச் சட்டத்தை திணிக்க முயன்றபோது அதிகார விதிமீறல்கள் செய்ததற்காகவும், கலகத்தை தூண்டியதற்காகவும் தென் கொரிய அதிபர் தற்போது விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.