சியோல் : தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) ஒரு பயணிகள் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 174 பேர் உயிரிழந்தனர். இருவர் அதிசயமாக காப்பாற்றப்பட்டனர்.
ஜேஜூ விமான நிறுவனத்தைச் சேர்ந்த (Jeju) அந்த விமானம் தரையிறங்கும்போது அதன் சக்கரங்கள் சரியாக வெளிவராததால் ஓடுபாதையில் இருந்து வழுக்கி அருகிலிருந்த கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 174 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென் கொரிய நாட்டின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இந்த விபத்து வர்ணிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் தேசிய தீயணைப்புத் துறை பின்வருமாறு அறிக்கையொன்றில் தெரிவித்தது:
“சியோலில் இருந்து சுமார் 290 கிலோமீட்டர் (180 மைல்) தொலைவில் உள்ள முவான் நகரத்தின் விமான நிலையத்தில் 181 பேர் பயணித்த ஜேஜு ஏர் விமானத்தில் இருந்து மக்களை மீட்கும் பணி தொடர்கிறது. தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டுவிட்டது. அவசர கால ஊழியர்கள் இரண்டு பேரை – ஒரு பயணி மற்றும் ஒரு பணியாளரை மீட்டனர். 32 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பல ஹெலிகாப்டர்கள் தீயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டன”.
தென் கொரியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விபத்து காட்சிகளில், ஜேஜு ஏர் விமானம் தரையிறங்கும் சக்கரங்கள் மூடிய நிலையில் ஓடுபாதையில் சறுக்கி, விமான நிலைய எல்லையில் உள்ள கான்கிரீட் சுவரில் நேரடியாக மோதியதைப் பார்க்க முடிந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:03 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.
அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். விமானத்தின் தரையிறங்கும் சக்கரங்களில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். பாங்காக்கில் இருந்து திரும்பிய இந்த விமானத்தில் இரண்டு தாய்லாந்து நாட்டவர்களும் பயணித்ததாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.
தெற்கு கொரியாவின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் இது மிக மோசமான விபத்துகளில் இது ஒன்றாகும். கடைசியாக 1997ல் குவாமில் கொரிய ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானபோது 228 பேர் உயிரிழந்தனர்.