சென்னை : சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) மாலை 5.00 மணிக்கு தமிழ் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். அந்தத் திறப்பு விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியனும் கலந்து கொண்டார்.
தொடர்ந்து 48-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு திரளானோர் வருகை தரத் தொடங்கியுள்ளனர். இந்த முறை 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோம் கண்காட்சிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டுக்கான 48-வது சென்னை புத்தக கண்காட்சி தென்னிந்திய நூல் விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தால் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்த புத்தகக் கண்காட்சி டிசம்பர் 27 தொடங்கி 17 நாட்கள் நடைபெற்று ஜனவரி 12 (2025) அன்று நிறைவடைகிறது.
பொது விடுமுறை நாட்களிலும் காலை 11 மணி முதல் மாலை 8:30 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும்.
மாலை வேளைகளில் உரையரங்கங்கள், நூல் வெளியீடுகள் தொடர்பான நிகழ்ச்சிகள் கண்காட்சியை ஒட்டியுள்ள மண்டபத்தில் நடைபெறுகின்றன.
மொத்தம் 900 விற்பனைத் தளங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து விற்பனை மையங்களிலும் நூல்கள் மீது குறைந்தது 10% தள்ளுபடி வழங்கப்படும். பல அனைத்துலக நூல் பதிப்பாளர்களும், வெளிநாட்டு தூதரகங்களும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் பங்கு கொள்கின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டணமின்றி கண்காட்சியில் பங்கு கொள்ளலாம்.
கண்காட்சி தொடர்பாக பல சிறப்பு நிகழ்ச்சிகளும் கண்காட்சி வளாகத்தில் நடத்தப்படுகின்றன.