கோ லாலம்பூர்: கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 28) கத்தார் நாட்டில் நடைபெற்ற ஆசிய பொது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசிய சிலம்பக் குழு 12 தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
மலேசிய சிலம்பச் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம். சுரேஷ் இதுகுறித்துக் கூறுகையில், டோஹா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற “தனித்திறமை” (தனிநபர் கலை – கழி சுழற்றல்) மற்றும் “பொருதல்” (போர்) பிரிவுகளில் ஆறு தேசிய வீரர்கள் சிறப்பான செயல்திறனைக் காட்டி தலா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றனர் என்றார்.
தங்கப் பதக்கம் வென்றவர்களில் ஆடவர் 60 கிலோவுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவில் பிரகாஷ்; 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் (55 கிலோ- 65 கிலோ) சஸ்திவேணா; மற்றும் 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் லீனாஸ்ரீ (30 கிலோ- 40 கிலோ), கவித்திரா (45-55 கிலோ), தர்னிஷா (55 கிலோ-65 கிலோ), மற்றும் ரணிஷா (70 கிலோவுக்கு மேல்) ஆகியோர் அடங்குவர்.
இந்தியா மற்றும் சவூதி அரேபியா பிரதிநிதிகளும் பங்கேற்ற இப்போட்டியில் வீரர்களை அனுப்பிய கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன என டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.
“ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று நாங்கள் வரலாறு படைத்துள்ளோம். ஆகஸ்டில் நடைபெற்ற சரவாக் சுக்மாவில் (மலேசிய விளையாட்டுப் போட்டிகள்) பதக்கம் வென்ற எங்களது ஆறு வீரர்கள் கத்தார் போட்டிகளிலும் பங்கேற்றனர்.”
“நிறைவு விழாவில் கத்தாருக்கான மலேசியத் தூதர் முகமது பைசல் ரசாலி ஒட்டுமொத்த சாம்பியன்கள் கோப்பையை வழங்கியது ஒரு தற்செயலான நிகழ்வாகும். அவர் இதனைப் பெருமையுடன் வழங்கினார்,” என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை (டிசம்பர் 28) வெளியிட்ட அறிக்கையில் சுரேஷ் இவ்வாறு தெரிவித்தார்.