Home நாடு சுக்மாவில் சிலம்பம் – கபடி போட்டிகள் இடம் பெறப் பாடுபட்ட சிவகுமாருக்கு காந்தன் பாராட்டு

சுக்மாவில் சிலம்பம் – கபடி போட்டிகள் இடம் பெறப் பாடுபட்ட சிவகுமாருக்கு காந்தன் பாராட்டு

327
0
SHARE
Ad
காந்தன் – சிவகுமார்

கோலாலம்பூர் : அடுத்த ஆண்டு சரவாக்கில் நடைபெறும் சுக்மா என்னும் மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறவிருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக சுக்மாவில் சிலம்பம் மற்றும் கபடி விளையாட்டுகள் இடம் பெற முடியாத நிலைமை இருந்து வந்தது.

குறிப்பாக சிலம்பம் சுக்மாவில் ஒரு விளையாட்டுப் போட்டியாக இடம் பெற மலேசிய சிலம்பக் கழகமும் அதன் முன்னாள் தலைவர்களும் நீண்ட காலமாக பல முனைகளில் போராடி வந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 17) மனித வள அமைச்சர் வ.சிவகுமாரை அவரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்த டத்தோ வி.எல்.காந்தன், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ உட்பட பல தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிலம்பம் மற்றும் கபடி சுக்மாவில் இடம் பெறுவதற்கு அனுமதியை பெற்றுத் தந்து இந்திய சமூகத்திற்கும் இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுத் துறைக்கும் பெருமை சேர்த்திருக்கும் மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

சிலம்பம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது எப்படி?

சிலம்பம் என்ற இந்தியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலை நாட்டின் அதிகாரபூர்வ தற்காப்புக் கலைகளில் ஒன்றாக நாடாளுமன்ற சட்டத்தில் இடம் பெறுவதற்கு முதன் முதலில் போராடியவர் டத்தோ காந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய சிலம்பக் கழகத்தைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவராக செயல்பட்டவரும் காந்தன்தான்.

சிலம்பம் அதிகாரபூர்வ விளையாட்டுப் போட்டியாக இந்நாட்டில் உருவெடுத்த வரலாற்றையும் சிவகுமாருடனான இந்த சந்திப்பின் தொடர்பில் காந்தன் விவரித்தார்.

“1976-ஆம் ஆண்டு வாக்கில் நாட்டில் இயங்கி வந்த பல்வேறு தற்காப்புக் கலைகளையும் பாரம்பரியத் தற்காப்புக் கலைகளையும் சட்டபூர்வமாக்கி அதற்கென பட்டியல் ஒன்றைத் தயாரித்து நாடாளுமன்ற சட்டமாக அங்கீகரிக்கும் முயற்சியில் மலேசிய அரசாங்கம் ஈடுபட்டது. அப்போது நான் மஇகா இளைஞர் பகுதியின் தலைவராக இருந்தேன். சிப்பாங்கைச் சேர்ந்த மகாகுரு ஆறுமுகம் என்னும் சிலம்பக் கலை ஆசிரியர் என்னைச் சந்தித்து, இப்போது சிலம்பக் கலையை மறைமுகமாக பயிற்றுவித்து வருகிறோம். பொது இடங்களில் சிலம்பம் பயிற்றுவிக்க அனுமதி தரப்படுவதில்லை என்ற நிலைமையை என்னிடம் எடுத்துக் கூறினார். அதன் அடிப்படையில் சிலம்பத்தையும் பாரம்பரிய இந்தியத் தற்காப்புக் கலையாக நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கும் – சட்டபூர்வமாக்கும் – கோரிக்கையை நான் 1976-ஆம் ஆண்டில் அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த டான்ஸ்ரீ (டத்தோ) ஆதி.நாகப்பனின் பார்வைக்கு கொண்டு சென்றேன். ஆதி.நாகப்பனும் அந்தக் கோரிக்கையை ஏற்று சிலம்பம் என்ற பாரம்பரிய தற்காப்புக் கலை நாடாளுமன்ற சட்டத்தின் தற்காப்புக் கலை பட்டியலில் சட்டபூர்வமாக இடம் பெற ஆவன செய்தார். அதைத் தொடர்ந்தே நான் மலேசிய சிலம்பக் கழகம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்டேன்” என காந்தன் தெரிவித்தார்.

அதன் பின்னர் அடுத்து வந்த சிலம்பக் கழகத் தலைவர்களான டத்தோ டாக்டர் ஞானபாஸ்கரன், ஏ.விஸ்வலிங்கம் ஆகியோரும் சிலம்பம் ஒரு போட்டி விளையாட்டாக சுக்மாவில் இடம் பெற வேண்டுமென நிறைய முயற்சிகள் எடுத்தனர்.

மலேசிய சிலம்பக் கழகத்தின் கடந்த தவணைக்கான தேசியத் தலைவராக இருந்த விஸ்வலிங்கம் இதன் தொடர்பில் அப்போதை விளையாட்டுத் துறை அமைச்சர்களையும், மனித வள அமைச்சர் வ.சிவகுமாருடனும் பல முறை சந்திப்புகள் நடத்தி சிலம்பம், சுக்மாவில் இடம் பெற முயற்சிகள் மேற்கொண்டார்.

இவ்வாறு ஒரு நீண்டகால போராட்டத்தின் அடிப்படையில் அடுத்தாண்டு சரவாக் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவதற்கு பாடுபட்ட மனித வள அமைச்சர் சிவகுமாருக்கும், சிலம்பக் கழகத்தின் முன்னாள் தலைவர்களுக்கும் காந்தன் தன் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.