Home உலகம் டிரம்ப் மத்திய கிழக்கின் 3 பணக்கார நாடுகளுக்கு வருகை!

டிரம்ப் மத்திய கிழக்கின் 3 பணக்கார நாடுகளுக்கு வருகை!

55
0
SHARE
Ad

வாஷிங்டன்: அதிபராகப் பதவியேற்ற பின் முதன் முறையாக மத்திய கிழக்கிற்கு இந்த வாரம் வருகை ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு, கத்தார் ஆகியவையே டிரம்ப் வருகை தரவிருக்கும் அந்த 3 நாடுகள். இந்த 3 நாடுகளுமே உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகள் என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம்.

அமெரிக்காவில் ஏற்கனவே மிகப் பெரிய முதலீடுகளைக் கொண்டுள்ள இந்த நாடுகள், டிரம்ப் வருகைக்குப் பின்னர் மேலும் அதிக அளவில் அமெரிக்காவில் இந்த நாடுகள் முதலீடுகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில், மத்திய கிழக்கு மோதல்களில் அமைதியைக் கொண்டுவருவதற்கும் இந்த மூன்று நாடுகளும் டிரம்பின் ஒத்துழைப்பைக் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய கிழக்குப் பிரச்சனைகள் மட்டுமின்றி உக்ரேன், ஈரான் நாடுகளின் பிரச்சனைகளிலும் இந்த 3 நாடுகளும் சமரசம் செய்து வைக்கக் கூடிய மூன்றாம் தரப்பாக ஆற்றலையும் ஆளுமையையும் கொண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

அதிபரான பின்னர் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் அதிகாரத்துவ வருகையாக இந்த 3 நாடுகளுக்கான வருகையாக இது அமைகிறது.

இதற்கு முன்னர் போப்பாண்டவரின் இறுதிச் சடங்கில் டிரம்ப் கலந்து கொண்டார். நாளை செவ்வாய்க்கிழமை (மே 13) சவுதி அரேபியா வந்தடையும் டிரம்ப், மே 16 வரை கத்தார், ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளுக்கு வருகை மேற்கொள்வார்.