Home உலகம் தென் கொரிய அதிபரை மீண்டும் கைது செய்ய அதிகாரிகள் முனைப்பு

தென் கொரிய அதிபரை மீண்டும் கைது செய்ய அதிகாரிகள் முனைப்பு

283
0
SHARE
Ad

 

யூன் சூக் இயோல்

சியோல் : கடந்த டிசம்பர் மாதத்தில் (2024) இராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயற்சி செய்த தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோலை அண்மையில் கைது செய்ய முயற்சி செய்த தென் கொரிய அதிகாரிகள் தோல்வியடைந்தனர். மீண்டும் அவரைக் கைது செய்யும் முயற்சியை தொடங்கியுள்ளனர்.

யூன் சூக்கை விசாரிக்கும் ஊழல் புலனாய்வு அலுவலகத்தைச் சார்ந்த வாகனங்கள் அவரின் இல்ல வளாகத்தில் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

காவல் துறை, இராணுவம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தென் கொரிய அதிகாரிகள் இந்த 2-வது கைது நடவடிக்கையை இன்று புதன்கிழமை (ஜனவரி 15) மேற்கொள்ளவுள்ளனர்.

இராணுவ ஆட்சியை அறிவித்ததைத் தொடர்ந்து அவர் மீதான ஊழல் விசாரணைகளும் இம்பீச்மெண்ட் என்னும் அவரின் நம்பகத்தன்மைக்கு எதிரான விசாரணைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அவரைக் கைது செய்ய சுமார் 80 பேர் கொண்ட காவல்துறையினர் முயற்சிகள் மேற்கொண்ட போது, தென் கொரிய அதிபரின் பாதுகாவலர்கள் அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தினர்.

சர்ச்சைக்குரிய வகையில் இராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயற்சி செய்த தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோல் மீதான கைது நடவடிக்கை கடந்த ஜனவரி 3-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தது.

விசாரணைக்கு வரவேண்டுமென மூன்று முறை அனுப்பப்பட்ட அழைப்பாணைகளை யூன் புறக்கணித்ததை அடுத்து இந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை நிறைவேற்ற காவல்துறையினர் முயற்சி செய்தனர்.

டிசம்பர் தொடக்கத்தில் ராணுவச் சட்டத்தை திணிக்க முயன்றபோது அதிகார விதிமீறல்கள் செய்ததற்காகவும், கலகத்தை தூண்டியதற்காகவும் தென் கொரிய அதிபர் தற்போது விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.