சென்னை: கடந்த சனிக்கிழமை (ஜனவரி 4) சென்னை அரும்பாக்கம் டி ஜி வைணவாஸ் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழா மாநாடு நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராக மலேசியாவின் பா.கு.சண்முகம் செயல்படுகிறார். இவ்விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அமைச்சர் நாசரிடம் மலேசியாவின் 10-வது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களின் அரசியல் போராட்டங்கள் குறித்து இரா.முத்தரசன் எழுதிய ‘அன்வார் இப்ராகிம்: சிறைமுதல் பிரதமர் வரை’ என்ற நூல் வழங்கப்பட்டது. இந்த நூலை நூலாசிரியர் இரா.முத்தரசன் அமைச்சர் நாசரிடம் நேரடியாக வழங்கினார். அப்போது மல்லை தமிழ்ச் சங்கத் தலைவரும் மதிமுக துணைப் பொதுச் செயலாளருமான மல்லை சத்யாவும் உடனிருந்தார்.
அமைச்சர் நாசர் நூல் குறித்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதோடு, அந்த நூல் சென்னையில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு தமிழ் நாட்டிலும் வெளியிடப்பட்டிருப்பதை கேட்டறிந்தார்.
தமிழ் நாட்டில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘யாவரும் பதிப்பகம்’ அமைத்திருக்கும் 15 & 16, எண் கொண்ட விற்பனைக் கூடத்தில் “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை” நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.