Home நாடு இரா.முத்தரசன் எழுதிய “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை” – நூல் சென்னை...

இரா.முத்தரசன் எழுதிய “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை” – நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியீடு கண்டது

135
0
SHARE
Ad
சென்னை புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பக உரிமையாளர் ஜீவகரிகாலன் -நூலாசிரியர் இரா.முத்தரசன்

சென்னை: மலேசியாவின் 10-வது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அரசியல் போராட்டங்களை விரிவாக விவரிக்கும் “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை”  என்ற தமிழ் நூல் இரா.முத்தரசன் கைவண்ணத்தில் உருவாகி கடந்த பிப்ரவரி 2024-இல் கோலாலம்பூரில் வெளியீடு கண்டது.

கோலாலம்பூரில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில், துணையமைச்சர் எம்.குலசேகரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் வெளியீடு கண்ட இந்த நூல் பின்னர் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு தலைமையில் பினாங்கிலும் அறிமுகம் கண்டது.

சென்னை புத்தகக் கண்காட்சி முகப்புத் தோற்றம்

இந்த நூல் இந்தியாவிலும் பதிப்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வரும் 48-வது சென்னை புத்தகக்கண்காட்சியில் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பிரபல பதிப்பகங்களில் ஒன்றான ‘யாவரும் பதிப்பகம்’ சார்பில் இந்நூல் வெளியீடு கண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்த நூல் குறித்து கருத்துரைத்த யாவரும் பதிப்பக உரிமையாளர் திரு ஜீவகரிகாலன், “அன்வார் இப்ராகிம் மலேசியாவின் பிரதமரானது முதல் தமிழ் நாட்டின் அரசியல் வட்டாரங்களிலும், அரசியல் ஆர்வலர்களிடையேயும், தமிழ் வாசகர்களிடத்திலும் அவரின் வாழ்க்கைப் பின்னணி, அரசியல் போராட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வந்ததை என்னால் உணர முடிந்தது. அதே வேளையில் மலேசியாவில் அன்வார் இப்ராகிம் நடத்திய அரசியல் போராட்டங்களை விவரிக்கும் “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை” என்ற நூலை எழுதிய இரா.முத்தரசன் என்னிடம் தொடர்பு கொண்டு, இந்த நூலை இந்தியாவிலுள்ள தமிழ் வாசகர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற தனது ஆர்வத்தை என்னிடம் தெரிவித்தார். மலேசியப் பிரதமர் குறித்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஒரே நூல் என்பதால் நானும் மகிழ்ச்சியுடன் அந்த நூலை இந்தியாவில் எனது ‘யாவரும் பப்ளிகேஷன்ஸ்’ பதிப்பகம் சார்பில், தமிழ் நாட்டிலேயே அச்சடித்து, சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு வெளியிட முன்வந்தேன்” எனத் தெரிவித்தார்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பகம் அமைத்திருக்கும் 15 & 16,  எண் கொண்ட விற்பனைக் கூடத்தில் “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை” நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) சென்னை தமிழ் புத்தகக் கண்காட்சி கோலாகலமாகத் தொடங்கியது. தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாக இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ் நாட்டு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோருடன் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியனும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 48-வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சி டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 வரை நடைபெறும்.

மொத்தம் 900 விற்பனைத் தளங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 100,000-க்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து விற்பனை மையங்களிலும் நூல்களுக்கு குறைந்தது 10% தள்ளுபடி வழங்கப்படும். பல அனைத்துலக நூல் பதிப்பாளர்களும், வெளிநாட்டு தூதரகங்களும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் பங்கு கொள்கின்றனர்.

17 நாட்கள் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.