கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரண்டு வந்து ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறுகையில், ஜனவரி 6-ஆம் தேதி முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு ஆதரவாக அம்னோ நடத்தும் பேரணியில் “ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள்” கலந்து கொள்வார்கள் என்றார்.
முன்னாள் பிரதமருக்கு நீதி கிடைப்பதற்காக நடத்தப்படும் போராட்டும் இது என்று அவர் வர்ணித்தார்.
அடுத்த திங்கட்கிழமை (ஜனவரி 6) நஜிப் அப்துல் ரசாக்கிற்கு ஆதரவாக அம்னோ தலைமையிலான ஒற்றுமை பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகா உறுப்பினர்கள் வீதிகளில் இறங்குவார்கள் என மஇகா தெரிவித்தது.
நடப்பு அரசியலில் இந்தப் பேரணி திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் வீட்டுக் காவலில் எஞ்சிய தண்டனையை அனுபவிக்க முன்னாள் மாமன்னர் உத்தரவிட்டார் எனக் கூறப்படும் ராஜ விவகாரம் தொடர்பாக நஜிப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே பேரணியின் நோக்கம் என்றும், இது “கட்சி மற்றும் இன அரசியலுக்கு” அப்பாற்பட்டது என்றும் எம்.சரவணன் விளக்கினார்.
“இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. ஜனவரி 6-ஆம் தேதி ஆயிரக்கணக்கான மலேசியர்கள் நடத்தும் அமைதி பேரணி நஜிப்புக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே. மக்களுக்கும் நாட்டிற்கும் மிகப் பெரிய பங்களிப்பை செய்த ஒரு தலைவரை கௌரவிப்பதற்காகவும் இது” என்று இன்று வியாழக்கிழமை (ஜனவரி 2) வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
மன்னிப்பு வாரியத்தின் முடிவில் கூடுதலாக எஞ்சிய சிறைத்தண்டனையை நஜிப் வீட்டுக் காவலில் அனுபவிக்க வேண்டும் என்ற தனது குறிப்பு இருப்பதாக பகாங் ஆட்சியாளரும், முன்னாள் மாமன்னருமான சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத் ஷா தனக்கு தெரிவித்ததாக நஜிப்பின் மகன் முகமட் நிசார் ஏற்கனவே சத்தியப் பிரமாணம் ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்னோவின் முடிவைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹசான் உள் சுற்றறிக்கை மூலம் பேரணியில் கலந்து கொள்ளுமாறு பாஸ் கட்சி உறுப்பினர்களையும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, மக்கள் முற்போக்குக் கட்சியின் தலைவர் லோகபால மோகன், தனது கட்சி உறுப்பினர்களும் பேரணியில் கலந்து கொள்வார்கள் என உறுதிப்படுத்தினார். “சுமார் 500 உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.