சென்னை : பிறந்திருக்கும் 2025-ஆம் ஆண்டு திமுக பிரமுகர் துரை முருகனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் சோதனை ஆண்டாகத் தொடங்கியிருக்கிறது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனும் வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. காட்பாடி காந்தி நகரில் அவரது இல்லம் அமைந்திருக்கிறது. அங்குதான் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
வேலூர் மாவட்டம் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது சோதனை நடத்தப்பட்டது.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு ரூ.11 கோடி கொடுப்பதற்காக இவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருந்தாக அப்போது புகார்கள் எழுந்தன.