விழாக்காலக் கொண்டாட்டங்களில் வாட்ஸ்ஆப் செயலியும் இணைந்துள்ளது. உலகளவில் நிறையபேர் பயன்படுத்தும் தகவல்தொடர்பு செயலி வாட்சாப். அதாவது 2.95 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது இச்செயலி. 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 3.14 பில்லியனை எட்டும் எனக் கருதப்படுகிறது. இதில் அவ்வப்போது பயனர்களின் வசதியைப் பொறுத்து புதிய அம்சங்களைக் கொண்டுவருவது வழக்கம். இந்நிலையில் தற்போது காணொளி மற்றும் சாதாரண அழைப்புகளுக்கு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குழுக்களில் தேர்வுசெய்து அழைக்கும் வசதி
இதுவரை, குழுவில் நாம் சாதாரண அல்லது காணொளி அழைப்பு விடுக்கும்போது அனைவருக்கும் அதற்கான அறிவிப்பு செல்லும். அதில் இணைய விரும்பாத பயனர்களுக்கு அது தொந்தரவை ஏற்படுத்தலாம். என்னதான் குழுவாக இருந்தாலும் நாமும் கூடக் குழுவில் சிலரைத் தவிர்த்து உரையாட விரும்பலாம். குழுவுக்குள்ளே ஒரு மினி குழு இருப்பது இயல்புதானே.
இம்மாதிரி தேவைகளைக் கருத்தில் கொண்டு, புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு குழுவில் அழைப்பு விடுக்கும்போது, முன்னரே குறிப்பிட்ட நபர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு மட்டும் அறிவிப்பு விடுக்கப்படும். இதன்மூலம் பிற பயனர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ள இயலும். எனவே இது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காணொளி அழைப்புகளில் ஃபில்டர்கள்
பல பயனர்கள் ஃபில்டர்கள் இல்லாமல் புகைப்படம் எடுப்பதையோ, காணொளிக் காட்சி எடுப்பதையோ விரும்பமாட்டார்கள். அவர்களுக்காகவே, இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில், காணொலி அழைப்புகளை மேற்கொள்ளும்போது ஃபில்டர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சேவை வழங்கப்பட்டது. இது வாட்சாப்பில் இல்லை என்ற வருத்தம் பலருக்கும் இருந்துவந்தது. இந்நிலையில் அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் வாட்சாப் பயனர்கள் காணொலி அழைப்புகளை மேற்கொள்ளும்போது ஃபில்டர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற சேவை புதியதாக வழங்கப்பட்டுள்ளது. புதிதென்பதால், பத்து ஃபில்டர்கள் மட்டுமே அறிமுகமாகியுள்ளன. பயனர்களின் தேவையைப் பொறுத்து காலப்போக்கில் இது அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
கணினிகளில் அழைப்புகளை எளிமையாக்கல்
கணினிகளில் வாட்சப் அழைப்புகளை மேற்கொள்வதற்கான அம்சங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. வாட்சப் செயலியைத் திறந்த உடனடியாகவே, அழைப்புகளுக்கான சேவை காட்டப்படும். அதோடு திறன்பேசியைப் போலவே அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
காணொலி அழைப்புகளின் தரத்தை மேம்படுத்தல்
வாட்சப் காணொலி அழைப்புகளில், காணொலிகளின் தரத்தை அதிகப்படுத்துவதற்கான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குழு மற்றும் தனிநபர் காணொளி அழைப்புகளிலும் அதிகத் தரத்தில் பார்க்க முடியும்.
பண்டிகை நாள்களை ஆனந்தமாகக் கொண்டாட இவை நிச்சயம் உதவும். ஒரு நாளைக்கு மட்டுமே இரண்டு பில்லியன் வாட்சாப் அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. விழாக்காலங்களில் இது அதிகரிக்கும். இந்தியாவில் வாட்சாப் செயலி அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிக தகவல்களை வாட்சாப் செயலியின் தளத்தில் படித்தறியலாம்