முரசு அஞ்சல், மறு உருவாக்கம் காணப்போவதாக அதன் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் கூறியுள்ளார்.
முரசு அஞ்சல் அறிமுகமாகி நாற்பதாண்டுகள் ஆகின்றன. தொடர்ந்து முரசு அஞ்சல் உடன் பயணம் செய்வோருக்கு இது புதுச்செய்தியல்ல. 1985ஆம் ஆண்டு முரசு அஞ்சல் அறிமுகமான எம்எஸ் டாஸ் காலம் முதலே இதைப் பயன்படுத்துவோர் தொடர்ந்து தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிந்துரைத்ததும் முரசு அஞ்சல் வெற்றியின் காரணங்களில் ஒன்று.
அச்சுத் துறையில் மறுலர்ச்சியை உண்டாக்கித் தொடர்ந்து விண்டோஸ் தனிக்கணினிகள், திறன்பேசிகள் என ஒவ்வொரு தொழில்நுட்ப மாற்றத்தின் போதும் முரசு அஞ்சல் தன்னை மேம்படுத்தி வந்துள்ளது. அக்காலக்கட்டத்தில் இருந்த தமிழ் உள்ளீட்டு முறையின் தேவையை நிறைவு செய்து அழகான தமிழ் எழுத்துருக்களை பயனர்களின் கரங்களுக்கு கொண்டு சேர்த்தது.
காலம் பல ஆனாலும் கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் தன்னை புதுப்பிக்க முரசு அஞ்சல் ஒரு போதும் தவறியதில்லை. யூனிக்கோடு நடைமுறைக்கு வந்தபோது அதற்கான மேம்பாடுகளை உடனே வழங்கியது முரசு அஞ்சல். விண்டோஸ் 2000த்தில்தான் யூனிகோடு முதன்முதலில் அறிமுகம் கண்டது. அதற்கு முன்னதாகவே முரசு அஞ்சல் எழுத்துருக்கள் யூனிகோடுக்கு மாற்றம் கண்டன.
இப்படி எல்லா விதத்திலும் முன்னோடியாக இருக்கும் முரசு அஞ்சல், திறன்பேசி உலகத்திலும் முன்னோடியாகத்தான் இருந்திருக்கிறது. கைப்பேசிகளில் தமிழைத் தட்டெழுத உதவிய செல்லினம், திறன்பேசிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது வசதிகளைச் சேர்த்துக்கொண்டே வந்தது. செல்லினத்தின் அடிப்படையும் முரசு அஞ்சலே. இந்த ஒளிமயமான வரலாற்றைப் பார்க்கும்போது, பயனர்களுக்கு புதுவித தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறது முரசு அஞ்சல் என்பதை நாம் அறிய இயலும்.
இத்தகைய முரசு அஞ்சல் இவ்வாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் புதிய பதிப்பை வெளியிட உள்ளது. இது வெறும் மேம்பாடு அல்ல, முழுமையான மறு உருவாக்கம் என்றே கூறிவிடலாம். நீங்கள் ஆசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், மாணவர், காணொளி கலைஞர், கணித்தமிழைப் பயன்படுத்தும் தமிழ் ஆர்வலர் என யாராக இருந்தாலும் இந்த வெளியீடு உங்களுக்காகத்தான்!
வெளியீட்டு நிகழ்வு வருகின்ற ஜூன் 27 இல் கோலாலம்பூரிலும், ஜூலை 5இல் சிங்கப்பூரிலும், ஜூலை 15 அன்று சென்னையிலும் நடைபெற இருக்கிறது. இந்த நாள்களை உங்கள் நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று முத்து நெடுமாறன் பதிவு செய்துள்ளார்.
இது பற்றிய மேலதிகத் தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகும். இந்த மகிழ்ச்சியான செய்திக்கு மத்தியில், சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
-இசக்கிமுத்து (செல்லினம்)
முரசு அஞ்சல் குறித்த முன்னோட்டக் காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம்: