(அண்மையில் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோன்களின் ஐஓஎஸ் 18.4 மென்பொருளில் தமிழ் எழுத்துரு குறித்து எழுந்துள்ள அதிருப்திகள் குறித்து செல்லினம் இணையத் தளத்தில் மு. இசக்கிமுத்து எழுதிய கட்டுரையின் மறு பதிவேற்றம்)
ஆப்பிள் தனது ஐஓஎஸ் 18.4 புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பயனர் இடைமுக மொழியாகத் தமிழும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு ஆப்பிள் நுண்ணறிவில் மாற்றங்கள், ஆப்பிள் விஷன் புரோவிற்கு புதிய செயலி, கார் பிளே மென்பொருளில் மாற்றங்கள் எனப் பல புதிய அம்சங்கள் வெளிவந்துள்ளன.
ஆப்பிள் விஷன் புரோ போன்ற ஒரு கருவியை வெறும் காகித வழிகாட்டிகளைப் பயன்படுத்தி இயக்குவது கடினமான விஷயம்தான். இந்த புதிய பதிப்பில் ஆப்பிள் விஷன் புரோ கருவிக்கு புதிய செயலி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இது விஷன் புரோவை எளிதாகவும், அதே நேரத்தில் பல்வேறு விதமாகவும் பயன்படுத்த வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வழிமுறைகளும் எளிதாக விளக்கப்பட்டுள்ளன. அதோடு காட்சி நுண்ணறிவு அம்சம் ஐபோன் 15 புரோ, ஐபோன் 15 புரோ மேக்ஸ் ரக திறன்பேசிகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆப்பிள் நுண்ணறிவு முக்கியமான அறிவிப்புகளை மட்டும் பூட்டுத்திரையில் காட்டும் அம்சம் ஒன்றை வழங்கி வருகிறது. ஆனால் நமக்கு எது முக்கியம் என்பதை நாம்தானே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் ஆப்பிள் நுண்ணறிவு அதனைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தது. இப்போதைய புதிய பதிப்பில் நீங்களே தேவையான செயலிகளிலிருந்து மட்டும், அறிவிப்புகளைப் பூட்டுத்திரையில் பெற முடியும்.
அதோடு ஆப்பிள் நுண்ணறிவின் ஒவ்வொரு முக்கியமான அம்சத்தையும் இனிமேல் தனியாகச் சென்று பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சிரியோடு பேசு, காட்சி நுண்ணறிவைத் திற போன்றவற்றை உள்ளடக்கிய, கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் இன்னும் பல அம்சங்களுக்கான கட்டளைகள் இதில் உள்ளன. ஆப் ஸ்டோர் விமர்சனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு சுருக்கக்குறிப்பு, சிரி-க்கான புதிய இயங்கு படங்கள் என ஆப்பிள் நுண்ணறிவின் புதிய மாற்றங்கள் நீள்கின்றன.
ஆப்பிளின் மகிழுந்துகளில் தகவல்களை வழங்கும் மென்பொருளான கார் பிளேவிலும் (car play) புதிய மாற்றங்கள் வந்துள்ளன. பெரிய திரைகளைக்கொண்ட மகிழுந்துகளில், திரையில் மூன்று வரிசைகளாக உள்ளீட்டிற்கான குறியீடுகளைக் காண்பிக்க உள்ளது. முன்பு இது இரண்டாக இருந்தது. அதோடு மின்சார வாகனங்களில், மின்னேற்ற நிலையங்களை எளிதில் கண்டறியும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் கடந்து ஆப்பிளில் பயனர் இடைமுக மொழியாகத் தமிழ் உள்பட பத்து இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்ட்ட அம்சம் இது. உள்ளூர் மொழிகளில் தங்கள் திறன்கருவிகளைப் பயன்படுத்தக் காத்திருந்தோருக்கு நல்வாய்ப்பு. ஆனால் இந்த மாற்றத்தில் தமிழ் எழுத்துரு வடிவம் அழகாக இல்லை என்ற சிலர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் எழுத்துகளின் இயல்பான வளைவு நெளிவுகள், ஆப்பிளின் புதிய தமிழ் எழுத்துருவில் இல்லை. தூ, நூ போன்ற எழுத்துகள் மிகவும் நீளமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு எழுத்துகளுக்கிடையே போதிய இடைவெளி இல்லாததும் குறையாகவே உள்ளது. துணைக்கால், புள்ளி போன்றவற்றின் அளவு மிகவும் சிறிதாக இருக்கின்றன. எழுத்துகள் சேரும்போது வடமொழி போலத் தெரிகிறது. இதையெல்லாம் குறிப்பிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தலைவர் சுந்தர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.
எழுத்தாளர் பா.ராகவன் அவ்வப்போது ஆப்பிள் மேக் கணினியை அதன் எழுத்துரு அழகுக்காகவே பயன்படுத்துவதாகக் குறிப்பிடுவார். அவரும் தன்னுடைய அதிருப்தியை பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். எழுத்துருக்கலைஞர் தாரிஸ் அஸிஸ் கூட இதுபற்றி தன்னுடைய கருத்தை ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுப்பியிருக்கிறேன் என பேஸ்புக்கில் எழுதியிருந்தார். இன்னும் சிலரும் சமூக ஊடகங்களில் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு முக்கியமான வரவேற்கத்தக்க முன்னேற்றம். குறிப்பாக இந்தியாவில் மொழி தொடர்பான பேச்சுகள் அதிகம் நடக்கும் காலகட்டம் இது. செய்தித்தாளைத் திறந்தால் மொழி பற்றிய செய்தி இல்லாத நாளே இல்லை என்றாகிவிட்டது. பண்பாட்டு விழுமியங்களைக் கட்டிக்காக்க மொழியைக் காப்பது அவசியம் என்கிற விழிப்புணர்வு ஓங்கி இருக்கும்போது பத்து இந்திய மொழிகளில் பயனர் இடைமுகத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மற்ற மொழி எழுத்துருக்களில் கவனம் செலுத்தியது போல், தமிழ் எழுத்துருவில் கவனம் காட்டாமல் இருப்பது ஒரு குறையே. இருப்பினும் பயனர்களின் விருப்பத்தை கேட்டறிந்து செயல்படுவதில் ஆப்பிள் அக்கறை காட்டும் நிறுவனம். apple.com/feedback தளத்தின் வழி அவர்கள் பயனரின் குறைகளை பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர். இந்தக் குறையை விரைவில் சரிசெய்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.