வாஷிங்டன்: உலகையே ஒரே நாளில் புரட்டிப் போட்டுவிட்டது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு அறிவிப்புகள். அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க பங்குச் சந்தை சரிவைக் கண்டதோடு, அமெரிக்க டாலரும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பதிலடியாக சீனாவும் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) விடுத்த அறிவிப்பில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 34 விழுக்காடு வரி ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அந்த முடிவும் உலக பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது.
டிரம்ப்பின் சுங்கவரிகள் காரணமாக, சராசரி அமெரிக்க குடும்பங்களுக்கு ஆண்டுக்கு $2,100 டாலர்கள் செலவாகலாம்.
நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 3) அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிந்தன. மூன்று முக்கிய சந்தை குறியீடுகளுக்கும் 2020க்குப் பிறகு மோசமான நாளாக நேற்று இருந்தது.
டிரம்ப்பின் மறுதேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அனைத்து ஆதாயங்களையும் அமெரிக்க டாலர் இழந்தது. உலகளாவிய சந்தைகளும் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. முன்னணி பொருளாதார நிபுணர்கள் சுங்கவரிகள் உலகளாவிய மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.
கனடா அமெரிக்காவுக்கு வணிக ரீதியாக பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25% எதிர்-சுங்கவரி விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது. மற்றொரு முக்கிய அமெரிக்க வர்த்தக பங்காளியான ஐரோப்பிய ஒன்றியமும் எதிர் நடவடிக்கைகளை தயாரித்து வருகிறது.