Home நாடு இளையராஜாவைச் சந்தித்தார் பிரதமர் அன்வார்!

இளையராஜாவைச் சந்தித்தார் பிரதமர் அன்வார்!

70
0
SHARE
Ad
புத்ரா ஜெயா : மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வருகை தந்திருக்கும் இசைஞானி இளையராஜாவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) தனது அலுவலகத்தில் சந்தித்து அளவளாவினார்.
இளையராஜாவுடன் அவரின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பிரதமரைச் சந்தித்தனர்.
“இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ இளையராஜாவை எனது அலுவலகத்திற்கு இன்று வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். மலேசியா-இந்தியா நாடுகளுக்கு இடையில் கலை-கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான அவசியத்தை நாங்கள் இருவரும் கலந்தாலோசித்தோம்” என அன்வார் தனது முகநூலில் பதிவிட்டார்.
“இந்தியத் திரைப்படங்கள், இசைத்துறை குறித்தும், அவை மலேசிய இந்திய ரசிகர்களை எவ்வாறு ஈர்க்கிறது என்பது குறித்தும் நாங்கள் இருவரும் எங்களின் இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். கலை, கலாச்சார அம்சங்களை மலேசியா தொடர்ந்து பேணிக் காக்கும், வலிமைப்படுத்தும் என நான் அவருக்கு உறுதியளித்தேன். நமது நாட்டின் பலதரப்பட்ட அம்சங்களையும், நல்லிணக்கத்தையும் எடுத்துக் காட்டும் அடையாளங்களாக இவை திகழ்வதையும் நான் எடுத்துக் கூறினேன்” என்றும் அன்வார் தன் இடுகையில் பதிவிட்டார்.

நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு தனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளையும் அன்வார் தெரிவித்துக் கொண்டார்.

இளையராஜாவின் கலைப் பயணத்தில் இந்த இசை நிகழ்ச்சி மற்றொரு வரலாற்று தருணமாக அமையட்டும் என்றும் பிரதமர் வாழ்த்தினார்.