சென்னை: வரிசையாக பிரம்மாண்டமான வெற்றிப் படங்களை மட்டுமே தந்து வந்தவர் இயக்குநர் ஷங்கர். அவ்வப்போது அவருக்கும் சில சறுக்கல்கள் ஏற்பட்டதுண்டு. எனினும் கமல்ஹாசன் நடித்திருந்தும், ‘இந்தியன் 2’ அவருக்கு பல சிக்கல்களையும் சோதனைகளையும் தயாரிப்பில் இருக்கும்போதே தந்தது.
இறுதியில் ஒருவழியாக நீண்ட காலத் தயாரிப்புக்குப் பின்னர் வெளிவந்த இந்தியன் 2 எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதனை ஈடுகட்டும் விதமாக மும்மொழிப் படமாக ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க எதிர்வரும் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகிறது ‘கேம் சேஞ்சர்’.
படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. விதம் விதமான தோற்றங்களில் ராம் சரண் தோன்றும் காட்சிகள். பிரம்மாண்டம், அரசியல் பின்னணி கொண்ட திரைக்கதை, இந்தி கதாநாயகி கியாரா அத்வானியின் கவர்ச்சி ஆட்டம், அதிரடி சண்டைக் காட்சிகள், கூடுதல் ஈர்ப்புக்கு எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு, என ரசிகர்களுக்கேற்ற கலவையாக ‘கேம் சேஞ்சர்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் ஷங்கர்.
படத்தின் முன்னோட்டமும் விறுவிறுப்புடன் அமைந்திருக்கிறது. வெளியிடப்பட்ட சில நாட்களில் 13 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படத்தை விளம்பரப்படுத்த படக் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கேம் சேஞ்சர் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: