சென்னை – சென்னை மாவட்ட செயலாளர், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்பட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை மீண்டும் பறித்து ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செல்வாக்கு மிகுந்தவராக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீப நாட்களாக ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட ஜெயலலிதா, உளவுத்துறை மூலம் ரகசிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஐவர் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள், அவர்களது ஆதரவாளர்கள் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த மாதம் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உதவியாளர்கள், ஆதரவாளர்களை கட்சி பதவியில் இருந்து நீக்கி ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் மேலும் சிலரது பதவியையும் அவர் பறித்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் எம்.எம்.பாபு இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
தென்சென்னை தெற்கு மாவட்ட பொறுப்பில் வி.என்.ரவி இன்று முதல் நியமிக்கப்படுகிறார். தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஆர்.என்.வரதராஜன், தேனி மாவட்ட மாணவர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.ஆர்.ஜெகதீஸ், ஆண்டிப்பட்டி ஒன்றியம் மாவட்ட பிரதிநிதி பொறுப்பில் இருக்கும் எம்.ராஜ்குமார் ஆகியோர் இன்று முதல் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அதேபோன்று கேரள மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஸ்ரீனிவாசன் வேணுகோபால், பொருளாளர் ஏ.எல்.பிரதீப் ஆகியோர் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட சென்னை, தேனி மற்றும் கேரளாவில் மாவட்ட பொறுப்புகளில் இருந்தவர்கள் அனைவரும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நேரத்தில் அதிமுகவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அனைவரையும் ஜெயலலிதா நீக்கி வருவது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.