புதுடெல்லி – கடந்த வாரம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் கடந்த 22-ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 35 பேர் பலியானார்கள். இதற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக பெல்ஜியத்திற்கு, பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வது ரத்து செய்யப்படாது என ஏற்கனவே வெளியுறுவுத் துறை செயலர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மூன்று நாடுகள் பயணத்தின் தொடக்கமாக, முதலில் பிரசல்ஸ் செல்லும் பிரதமர் மோடி, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேலை சந்தித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
அதில், இரு நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்ததகம் தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. பின்னர் பிரசல்ஸில், வைர வியாபாரிகள் உள்ளிட்ட தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார்.
அதனைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றுகிறார். இதுதவிர, அறிஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் மோடி சந்திக்கவுள்ளார்.
அதைத் தொடர்ந்து, வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடி, அங்கு வரும் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 4-ஆவது அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில், அணுசக்தி பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதைத் தொடர்ந்து, 2 நாள் பயணமாக, பிரமதர் மோடி, ஏப்ரல் 2-ஆம் தேதி சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்.
தலைநகர் ரியாத்தில் அந்நாட்டு அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல்-சவூதை மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இந்நிலையில், பெல்ஜியம் செல்லும் மோடி, பிரசல்ஸ் குண்டுவெடிப்பில் பலியான தமிழர் ராகவேந்திரன் கணேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.