ஜோர்ஜ் டவுன் – நேற்று மாலை கைது செய்யப்பட்டு, இரவு முழுவதும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் பினாங்கு மாநிலத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்ட பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், இன்று பினாங்கு அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) நிறுத்தப்படுவார்.
பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலை முதல் குழுமியுள்ள லிம் குவான் எங் ஆதரவாளர்கள் (படம்: நன்றி – லிம் குவான் எங் டுவிட்டர் பக்கம்)
நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் ஜசெக ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் திரளத் தொடங்கியுள்ளனர்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை இரவு முழுவதும் காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என ஜசெக நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான கோபிந்த் சிங் டியோ தனது முகநூல் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை பங்களா வாங்கப்பட்ட விவகாரத்தில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய லிம் குவான் எங்கை – அதுவும் ஒரு மாநில முதலமைச்சரை – இரவு முழுவதும் தடுத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் இதற்காக லிம் குவான் எங்கின் வழக்கறிஞர் குழு கண்டனம் தெரிவிப்பதாகவும் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.
“ஒரு மாதமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில், குற்றச்சாட்டு விவரங்கள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் ஏன் அவரைத் தடுப்புக் காவலில் வைக்க வேண்டும்? குவான் எங்கை சிறையில் வைத்திருக்க மாட்டார்கள் என நம்புகின்றோம். காரணம், ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தின் உள்ளே தடுப்புச் சிறை அறைகள் இருக்கின்றன” என்றும் கோபிந்த் சிங் கூறியுள்ளார்.