கோலாலம்பூர் – 1946ஆம் ஆண்டில் அன்றைய மலாயா இந்தியர்களின் அரசியல் நலன்களுக்காகப் போராடுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட மலேசிய இந்தியர் காங்கிரசின் 70ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் இன்று கோலாகலமாக, மஇகா தலைமையகத்தில் தொடங்கின.
மஇகாவின் தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இந்தக் கொண்டாட்டங்களை சுமார் ஆயிருத்துக்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியாகத் தொடக்கி வைத்தார்.
இன்றைய சிறப்புக் கூட்டத்தில் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ க.குமரன் கலந்து கொண்டு, மஇகாவின் பழங்கால வரலாறுகளையும், ஆரம்ப காலப் போராட்டங்களையும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
டான்ஸ்ரீ குமரனின் உரைக்குப் பின்னர் உரையாற்றிய டாக்டர் சுப்ரா, இதுநாள்வரை கட்சியின் போராட்டங்களை விட முக்கியம் என்னவென்றால் இனி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நாம் எப்படி கட்சியை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கின்றது என்று கூறினார்.
மஇகாவின் 70ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 7.00 மணிக்கு பிரதமர் நஜிப் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் செர்டாங் விவசாய கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.