கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தில், தற்போது கட்சிக்கு வெளியில் நிற்கும் எஞ்சிய மஇகா கிளைகள் மீண்டும் கட்சி வளையத்துக்குள் திரும்ப மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவின்படி, இதுவரை ஆண்டுக் கூட்டம் நடத்தாத, ஆண்டுச் சந்தாவை மஇகா தலைமையகத்திற்கு சமர்ப்பிக்காமல் இருக்கும் மஇகா கிளைகள் எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தங்களின் சந்தாக் கட்டணத்தைச் செலுத்தி கிளைகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.
அதன்பின்னர் அந்தக் கிளைகள் எதிர்வரும் செப்டம்பர் 17, 18 தேதிகளில் தங்களின் கிளைகளுக்கான புதிய கிளைப் பொறுப்பாளர்களுக்கான வேட்புமனுத் தாக்கலை நடத்த வேண்டும்.
செப்டம்பர் 24,25ஆம் தேதிகளில் இந்தக் கிளைகளின் ஆண்டுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
கட்சிக்கு வெளியில் இருக்கும் மஇகா கிளைகள் மற்றும் பழனிவேல் தரப்பு மஇகா தலைவர்கள் மீண்டும் கட்சிக்குள் திரும்பும் நோக்கில், மஇகா தலைவர் டாக்டர் சுப்ராவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக டத்தோ எஸ்.சோதிநாதன் ஏற்கனவே அறிவித்திருக்கின்றார்.
இந்நிலையில், இந்த மஇகா கிளைகளுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் வண்ணம் நேற்று கூடிய மஇகா மத்திய செயலவை முடிவெடுத்திருக்கின்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மேலும் பல மஇகா கிளைகள் கட்சிக்குள் திரும்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஇகா தலைமையகத்தின் கணக்குப்படி ஏறத்தாழ 300 கிளைகள் இன்னும் கட்சிக்குள் திரும்பாமல் வெளியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.