கோலாலம்பூர் – மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது இரங்கல் அறிக்கையில் டாக்டர் சுப்ரா கூறியிருப்பதாவது:-
“தனது வாழ்நாளில் கலைத்துறை மட்டுமின்றி, தமிழக அரசியலிலும் சிறந்த அனுபவங்களைப் பெற்று, மக்களின் மத்தியில் குறிப்பாக, ஏழை எளிய மக்களின் வாழ்வாரத்திற்காக ஒரு சிறந்த தலைமைத்துவத்தைத் தந்தவர் மறைந்த அம்மா ஜெயலலிதா அவர்கள். அந்த நல்லுள்ளம் கொண்ட வீரப் பெண்மணி மக்களின் வாழ்க்கையே தனது வாழ்க்கையாக எண்ணி வாழ்ந்து வந்த, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவிற்கு தீவிர சிகிச்சை அளித்தும் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது.”
“அமரர் ஜெயலலிதா மலேசியாவுக்கு தமிழக முதல்வராக இதுவரை அதிகாரபூர்வ வருகை தந்ததில்லை என்றாலும், மலேசிய இந்தியர்களிடையே அவர் தனது அரசியல் ஆளுமையால் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார். தமிழக அரசோடு மலேசிய அரசாங்கம், வணிகம், மொழி, கலை, கலாச்சாரம், போன்ற பல்வேறு முனைகளில் நல்லுறவுகள் தொடர்ந்து பேணப்படுவதற்கு ஜெயலலிதா உறுதுணையாக இருந்திருக்கின்றார்.”
“மஇகா தலைவர்கள் பலரை அவர்கள் தமிழகம் வரும்போது நேரடியாகச் சந்தித்து, மலேசிய இந்தியர்கள், அரசியல் நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து மரியாதை தந்துள்ளார் ஜெயலலிதா. 2014-இல் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுகவை இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக உயர்த்திக் காட்டியவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜெயலலிதா.”
“தமிழ் நாட்டு மக்களின் உரிமைகளுக்காக அவர் நடத்திய காவேரிப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, கச்சத் தீவு மீட்பு போன்ற உரிமைப் போராட்டங்களாலும், சாதாரண, அடித்தட்டு மக்களையும் சென்றடையும் வண்ணம் அவர் அறிமுகப்படுத்திய சமூக நலத் திட்டங்களாலும், தமிழக மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார் ஜெயலலிதா. ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் அவர் எடுத்த நிலைப்பாடு வரலாற்றுபூர்வமானது என்பதோடு, எதிர்வரும் காலங்களிலும் உலகத் தமிழர்களால் நினைவு கூறப்படும்”
“எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண் ஆதிக்கம் மிகுந்த தமிழக அரசியலில் குடும்பப் பின்னணி, அரசியல் பின்னணி என எதுவும் இல்லாமல், தனித்து நின்று ஒரு பெண்மணியாக, வாகை சூடியவர் அமரர் ஜெயலலிதா. அதிமுக பல போராட்டங்களை சந்தித்தபோது, தனது திறமைகள், ஆளுமைகள் ஆகியவற்றின் காரணத்தினால்தான் ஓர் இரும்புப் பெண்மணியாக, தனிப் பெரும் தலைவராக அவரால் அந்தக் கட்சியை வழிநடத்திச் செல்ல முடிந்தது, தமிழக முதல்வராகவும் பல தவணைகள் பதவி வகிக்க முடிந்தது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.”
“தோல்விகளையும், வேதனைகளையும் சந்தித்திருந்தாலும்கூட, தமிழக மக்களின் ஒளி விளக்காக விளங்கியவர் அம்மா ஜெயலலிதா அவர்கள். தமிழக மக்களின் மனங்களை ஆட்சி செய்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.”
“அந்த வகையில், உலகம் எங்கும் உள்ள பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அவர் திகழ்ந்தார். உற்சாகமூட்டும், ஊக்கமூட்டும் சக்தியாகவும் அவர் பெண்களால் போற்றப்பட்டார்.
அமரர் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதோடு, அவரது மறைவால் வாடும், தமிழக மக்களுக்கு மலேசிய இந்தியர்களின் சார்பிலும், மஇகா சார்பிலும் எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.” – இவ்வாறு டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.