![](https://selliyal.com/wp-content/uploads/2020/07/dr.subramaniam.jpg)
புவனேஸ்வர் : மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் மலேசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சருமான டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்துக்கு ‘பாரதிய சம்மான்’ என்ற உயரிய கௌரவ விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.
2025-ஆம் ஆண்டுக்கான பிரவாசி பாரதிய திவாஸ் என்னும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு இந்த முறை ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெறுகிறது. அம்மாநாட்டில் அனைத்துலக அளவில் பல அயல் நாட்டு பிரமுகர்களுக்கு, அயல் நாடு வாழ் இந்திய வம்சாவளியினருக்காக அவர்கள் ஆற்றிய சேவைகளுக்காக ‘பாரதிய சம்மான்’ என்ற கௌரவ விருது வழங்கப்படுகிறது.
இந்த முறை மலேசியாவிலிருந்து டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இந்த விருதைப் பெறுகிறார். அவரின் அரசியல் சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) நடைபெறும் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் நிறைவு விழாவில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு பாரதிய சம்மான் விருதுகளை வழங்குவார்.
டாக்டர் சுப்பிரமணியம் 2004 முதல் 2018 வரை சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். 2004 முதல் 2008 வரை நாடாளுமன்ற செயலாளராகப் பதவி வகித்த அவர் 2008 முதல் 2018 வரை மனித வள அமைச்சராகவும் பின்னர் சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார். 2013 முதல் மஇகாவின் தேசியத் தலைவராகப் பணியாற்றினார்.
ஒவ்வொரு பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டிலும் வழங்கப்படும் இந்த விருதை ஏற்கனவே மலேசியாவிலிருந்து துன் ச.சாமிவேலு, டான்ஸ்ரீ ஜி.வடிவேலு, டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.