Home Featured தமிழ் நாடு அரை மணி நேர தியானத்திற்குப் பின்னர் கண்ணீருடன் எழுந்த ஓபிஎஸ்! கட்டாயத்தால் பதவி விலகினேன் என்றார்!

அரை மணி நேர தியானத்திற்குப் பின்னர் கண்ணீருடன் எழுந்த ஓபிஎஸ்! கட்டாயத்தால் பதவி விலகினேன் என்றார்!

829
0
SHARE
Ad

panneer selvam-jayalalithaa memorialசென்னை – திடீரென நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (இந்திய நேரம்) 9.30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வம், அங்கு தியான நிலையில் அமர்ந்தார். அதன் பின்னர், அங்கு அனைத்து ஊடகங்களும் குவியத் தொடங்கின.

சுமார் அரை மணி நேரத் தியானத்திற்குப் பின்னர், விழிகளின் ஓரங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் சமாதியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி எழுந்து, பின்னர் சமாதியை ஒருமுறை சுற்றி வந்தார்.

அதன் பின்னர், குழுமியிருந்த பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பன்னீர் செல்வம் பேசத் தொடங்கினார். அவரது உரையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • அம்மாவின் ஆன்மா எனக்கு சில உண்மைகளைக் கூறுமாறு கட்டளையிட்டிருக்கிறது. அதிமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் சில செய்திகளைக் கூற விரும்புகிறேன்.
  • அம்மா உடல் நலம் குன்றியிருந்த நேரத்தில் என்னை அழைத்து ஜெயலலிதாவின் உடல் நிலையைக் காட்டி, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், கட்சியைக் கட்டிக் காக்க வேண்டும் என சின்னம்மா கேட்டுக் கொண்டார்கள்.
  • பின்னர் அம்மா மறைவுக்குப் பின்னர் என்னையே முதல்வராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். நான் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இரண்டு முறை ஜெயலலிதா உங்களைத்தான் நியமித்தார் என்பதால் வேறு யாரையாவது நியமித்தால் பிரச்சனை வரும் அதனால் நீங்களே முதல்வராகத் தொடருங்கள் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.
  • அதன் பின்னர் உங்களுக்கே தெரியும். வந்த ஒன்றன் பின் ஒன்றாக எழுந்த பிரச்சனைகளை சமாளித்தேன். அம்மாவின் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற முறையில் ஜல்லிக்கட்டு, குடிநீர்ப் பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டேன்.
  • ஆனால், நான் பிரதமரைச் சந்திக்க புதுடில்லி சென்ற போது தம்பிதுரை நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அதிபரைப் பார்க்கப் போனார். முதல்வர் என்ற முறையில் என்னைப் பார்க்க நேரம் ஒதுக்கியிருந்ததால்தான் மோடி தம்பிதுரை குழுவினரைப் பார்க்கவில்லை. இரண்டு தரப்பும் ஒரே பிரச்சனைக்காகத்தான் என்னைப் பார்க்க வருகிறீர்கள் என்று கூறி என்னை மட்டும் பார்த்தார்.
  • ஆனால், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் அடுத்த முதல்வராக சின்னம்மா வரவேண்டும் என்று கூறினார். நான் உடனே சின்னம்மாவிடம் சென்று, இதுகுறித்துப் பேசினேன். சரி மீண்டும் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சின்னம்மா கூறினார்.
  • ஆனால், செல்லூர் ராஜூ என்னை வந்துப் பார்த்து சின்னம்மா முதல்வராக வேண்டும் என்று கூறினார். என்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்துவிட்டு, இவ்வாறாக பல நெருக்குதல்கள் எனக்குத் தரப்பட்டன.
  • என்னைக் கட்டாயப்படுத்தியதால்தான் நான் பதவி விலகினேன்.
  • தன்னந் தனியனாக நின்று கூடப் போராடத் தயார் என்றும் பன்னீர் செல்வம் சூளுரைத்தார்.
  • மக்கள் விரும்பினால், அதிமுக தொண்டர்கள் விரும்பினால் நான் எனது பதவி விலகலை திரும்பப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.