Home இந்தியா “அதிமுகவுக்கு 10 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும்!” – பிரசாந்த் கிஷோர் கணிப்பு

“அதிமுகவுக்கு 10 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும்!” – பிரசாந்த் கிஷோர் கணிப்பு

271
0
SHARE
Ad
பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழ்நாட்டின் அரசியல் விமர்சகர்கள், திமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என ஒரு சார்பாகவே பெரும்பாலும் கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்தியாவின் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஒரு மாறுபட்ட  கண்ணோட்டத்தை வழங்கியிருக்கிறார். தரவுகள், புள்ளி விவரங்களின் அடிப்படையில் தேர்தல்களைக் கணிக்கும் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ஆலோசகராகச் செயல்பட்டவர்.

தமிழ்நாட்டில் அதிமுகவை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்கள் 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மேல் வெல்லக்கூடிய சாத்தியம் உண்டு என கணித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

வாக்களிப்பு தேர்தல் தேதி நெருங்க நெருங்க, பல தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். மகளிருக்கான மாதம் 1000 ரூபாய் அன்பளிப்பு எதிர்மறையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது. அந்தப் பணம் கிடைக்காதவர்களின் குரல்கள்தான் சமூக ஊடகங்களில் அதிகம் பதிவிடப்படுகிறது.  திமுக தலைவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பெண்களின் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்தப் பணத்தைப் பெறுவதால் மகளிர் சமூகத்தை ‘அந்தப் பணத்தில்தானே பேர் அண்ட் லவ்லி கிரீம் போட்டு பளிச்செனத் தெரிகிறீர்கள்’ என சில திமுக வேட்பாளர்கள் கேவலப்படுத்தியதும் சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

பல தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் வரும் சட்டமன்ற உறுப்பினர்களை நோக்கியும் எதிர்ப்புக் கணைகள் வீசப்படுகின்றன.

மாநில அளவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் கலாச்சாரம், அமைச்சர்களின் ஊழல்கள், ஆணவ நடவடிக்கைகள் போன்ற மற்ற விவரங்களும் திமுகவுக்கு எதிராக பிரச்சாரங்களில் முன்வைக்கப்படுகின்றன.

பிரசாந்த் கிஷோரின் மற்றொரு கணிப்பு பாஜக தமிழ்நாட்டில் பெறப்போகும் வாக்கு விழுக்காடு. மொத்த  வாக்குகளில் 10 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாக்குகளை தமிழ்நாட்டில் பாஜக பெறும் எனவும் கூறியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். தென் மாநிலங்களில் பாஜக செல்வாக்கு அதிகரிக்கும் என்பதும் அவரின் இன்னொரு கணிப்பு!

பொதுவாக தென் மாநிலங்களில் பாஜக மோசமாகத் தோல்வியடையும் – அதனால் மத்தியில் அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பையே இழக்கும் – என்ற தமிழ் நாட்டு அரசியல் விமர்சகர்களின் கூற்றுகளுக்கு நேர் எதிர்மாறானதாக பிரசாந்தின் கணிப்பு அமைந்திருக்கிறது.

மேற்கு வங்காளத்தில் பாஜக முந்தும் – ஆளும் திரிணாமூல் காங்கிரசை விட அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றும் – என்பது பிரசாந்தின் இன்னொரு அதிர்ச்சி தரும் கணிப்பு.

27 விழுக்காடு முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட மேற்கு வங்காளத்தில் இந்துத்துவா அடிப்படையில் பாஜக, மக்கள் ஆதரவு பெற்று முன்னேறி வருகிறது என்பது பிரசாந்த் தன் கணிப்புக்கு ஆதரவாக முன் வைக்கும் வாதம்.