கோலாலம்பூர் – அஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியின் 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரசிகர்களுக்கு 120 தங்கக் கட்டிகளை ‘விழுதுகள் 10 பரிசு போட்டி’ வாயிலாக வழங்கப்படவிருக்கிறது. இப்போட்டி அஸ்ட்ரோ வானவில், அஸ்ட்ரோ விண்மீன் எச்டி மற்றும் அஸ்ட்ரோ கோ-வில் இடம்பெறும்.
இது குறித்து நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் உயர்நிலை துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “எங்களின் விழுதுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடங்கி இம்மாதத்துடன் 10 வருடம் ஆகின்றது. இது எங்களுக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இவ்வேளையில் இரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையிலும் அவர்களுக்குப் பரிசாக ‘விழுதுகள் 10 பரிசு போட்டி’ ஏற்று நடத்தவிருக்கிறோம். அதே வேளையில், எதிர்வரும் காலங்களில் இரசிகர்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாகப் பல புதிய விஷயங்களை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.
இப்போட்டி எதிர்வரும் ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி, 2018-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி வரை பன்னிரெண்டு மாதங்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு மாதமும், விழுதுகள் நிகழ்ச்சிகளைப் பார்த்து வரும் நேயர்கள் 2 கிராம் மதிப்புள்ள தங்கக் கட்டியைப் பரிசாகத் தட்டிச் செல்லும் வாய்ப்பு காத்து கொண்டிருக்கின்றது.
புதிய திறமையான அறிவிப்பாளர்களை உருவாக்கும் நோக்கில், இன்னும் சில நாட்களில் மலரவுள்ள விழுதுகள் நிகழ்ச்சியின் புதிய பாகத்தை ஒரு மாத காலத்திற்கு தற்போதுள்ள அறிவிப்பாளர்களுடன் இணைந்து ரேவதி மாரியப்பன், ஸ்ரீ குமரன் முனுசாமி, செல்வகுமாரி செல்வராஜூ, கபிலஸ் கணேசுன், குணசீலன் சிவகுமார், அகலியா மணியம் ஆகியோர் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள்.
இந்த 6 பேரும் விழுதுகள் நிகழ்ச்சிக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அறிவிப்பாளர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் நேற்று செய்தியாளர்கள் முன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இதனிடையே, திங்கள் முதல் வெள்ளி காலை மணி 9.30 தொடங்கி 11.00 மணி வரை நடைபெறும் விழுதுகளின் புதிய பாகத்திலும், என்ன செய்தி?, அமைச்சு அறிமுகம், மனம், பெண்கள் எனப் பல புத்தம் புதிய அங்கங்களை இரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
அதுமட்டுமின்றி, மே மாதம் முதல் வடக்கிலிருந்து தெற்கு வரை குறிப்பிட்ட சில மாநிலங்களில் விழுதுகள் அறிவிப்பாளர்கள் மக்களைச் சந்தித்து பல நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார்கள்.
‘விழுதுகள் 10 பரிசு போட்டி’யில் கலந்து கொள்ளுவது எப்படி?
திங்கள் முதல் வெள்ளி வரை காலை மணி 9.30 தொடங்கி 11.00 மணி வரை அஸ்ட்ரோ வானவில், அஸ்ட்ரோ விண்மீன் எச்டி மற்றும் அஸ்ட்ரோ கோ-வில் ஒளியேறும் விழுதுகள் நிகழ்ச்சியைக் கண்டு களியுங்கள்.
இப்போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை www.astroulagam.com.my/vizhuthugal10 அகப்பக்கத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்நிகழ்ச்சியின் போது தொலைக்காட்சியில் இடம்பெறும் 2 கேள்விக்கும் 30 சொற்களில் கொடுக்கப்பட்ட சுலோகத்தையும் பூர்த்து செய்யவும்.
தொலைக்காட்சியில் கொடுக்கப்படும் குறியீடுயுடன் (unique code) உங்களின் பதில்களை அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கவும்.
அஞ்சல் முகவரி –
Vizhuthugal 10 Parisu Potti, Indian Production,
All Asia Broadcast Centre Technology Park Malaysia,
Bukit Jalil.
மின்னஞ்சல் – Vizhuthugal10ParisuPotti@astro.com.my
வெற்றியாளர்களின் பெயர் பட்டியல் விழுதுகள் நிகழ்ச்சியிலும் அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்திலும் இடம்பெறும்.