புத்ரா ஜெயா – நீர்ப்பாசன, வடிகால் துறை இலாகாவில் ஒரு குத்தகைத் திட்டத்திற்காக, மோசடி நோக்கில் 13 மில்லியன் ரிங்கிட் கூடுதலாகக் கோரியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் 63 வயது முன்னாள் மஇகா உதவித் தலைவரான ‘டான்ஸ்ரீ’க்கு விசாரணைக்காக 6 நாள் தடுப்புக் காவல் வழங்கப்பட்டிருக்கிறது.
ஊழல் தடுப்பு ஆணையம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவரோடு சேர்த்து கைது செய்யப்பட்டிருக்கும் மேலும் நால்வருக்கும் 6 நாள் தடுப்புக் காவல் வழங்கி மாஜிஸ்ட்ரேட் ஏ.அகிருடின் உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டிருக்கும் டான்ஸ்ரீயின் மகனும் இதுவரையில் கைது செய்யப்பட்டிருக்கும் ஐவரில் ஒருவராவார்.
இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அவர்கள் அனைவரும் தடுப்புக் காவல் நீட்டிப்புக்காக நீதிமன்றம் கொண்டுவரப்பட்டனர்.
ஜியோடியூப் எனப்படும் பிரம்மாண்ட குழாய் ஒன்றின் மாதிரி….
ஆற்றங்கரைகளை விரிவுபடுத்தும் குத்தகைத் திட்டத்தின் கீழ் ஜியோ டியூப் (geotubes) எனப்படும் (படம்) சுமார் 4 மில்லியன் மதிப்பு கொண்ட 89 குழாய்களை மட்டும் விநியோகித்துவிட்டு, 350 குழாய்களை விநியோகித்ததாக பணம் கோரி பெற்றதற்காக அந்த ‘டான்ஸ்ரீ’ நேற்று கைது செய்யப்பட்டார்.
ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த அந்த டான்ஸ்ரீயும் அவரது குடும்பத்தினரும், குத்தகைத் தொழில், கட்டுமானம், போக்குவரத்து போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
இன்று வியாழக்கிழமை மேலும் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து இதுவரை 6 பேர், இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.