Home Featured கலையுலகம் தமிழ் உணர்வோடு பேசும் ‘விழுதுகள்’ அறிவிப்பாளர்கள் – முத்து நெடுமாறன் பாராட்டு!

தமிழ் உணர்வோடு பேசும் ‘விழுதுகள்’ அறிவிப்பாளர்கள் – முத்து நெடுமாறன் பாராட்டு!

1641
0
SHARE
Ad

MuthuNedumaranspeech642017 கோலாலம்பூர் – மலேசிய இந்தியர்களிடம் மிகுந்த வரவேற்பினைப் பெற்ற அஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இம்மாதத்துடன் 10 ஆண்டுகளை எட்டுகிறது. இதனை முன்னிட்டு, விழுதுகள் நிகழ்ச்சியில் இடம்பெறவிருக்கும் புத்தம் புதிய அங்கங்கள், புதிய அறிவிப்பாளர்கள் அறிமுகம், ரசிகர்களுக்குப் பரிசுப் போட்டிகள் ஆகியவற்றை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இச்சந்திப்பில், விழுதுகள் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொண்ட அனுபவம் குறித்துப் பேசுவதற்காக, புகழ்பெற்ற மூன்று முக்கியப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களில் முரசு அஞ்சல் மென்பொருள், செல்லினம் குறுஞ்செயலியின் தோற்றுநர் மற்றும் செல்லியல் ஊடக குறுஞ்செயலியின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரும், இணை தோற்றுநருமான முத்து நெடுமாறனும் ஒருவர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், விழுதுகள் நிகழ்ச்சி குறித்து முத்துநெடுமாறன் தனது உரையில் கூறியதாவது:-

“விழுதுகளின் தொடக்கத்திலிருந்தே எனக்கு ஈடுபாடு இருந்து வருகின்றது. முதலில், விழுதுகள் என்ற பெயரே என்னுடைய எழுத்துருவில் இருந்து தான் தொடங்கினீர்கள். இந்நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் (திரையில் எழுதப்பட்ட) எல்லா எழுத்துருக்களும் நான் அந்தக் காலத்தில் உருவாக்கியது தான். எனவே ஏதோ வகையில் இந்நிகழ்ச்சியுடன் உறவு இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் தொடக்கக் காலத்தில் இருந்தே அதன் அறிவிப்பாளர்களுடன் எனக்கு நல்ல பழக்கம். ஒருநாள் சோதிராஜன் நிகழ்ச்சி படைத்த போது, காலையில் என்னை நிகழ்ச்சியில் பேச அழைத்திருந்தார். நானும் சென்றேன். நான் வருகிறேன் என்றவுடன் அன்றைய தலைப்பை மாற்றிவிட்டார்கள். தலைப்பு என்னவென்றால், ‘தமிழ் சோறு போடுமா?’ என்பது தான்.”

“நான் போய் உட்கார்ந்தவுடன் அறிவிப்பாளர், நல்லா இருக்கீங்களா? என்று கேட்டார். நான் அதற்கு “தமிழ் போட்ட சோறு சாப்பிட்டு ரொம்ப நல்லா இருக்கேன்” என்று கூறினேன். அந்த நிகழ்ச்சி முடித்து வெளியே வந்தவுடன் என்னுடைய போன் நிற்காமல் அடித்துக் கொண்டிருந்தது. நிறைய பேர் அழைத்து ரொம்ப நன்றாக இருந்தது என்று கூறினார்கள். எனவே பல மறக்க முடியாத அனுபவங்கள் இந்நிகழ்ச்சியின் மூலமாக எனக்குக் கிடைத்திருக்கிறது”

“இந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு தகவல்களை இந்நிகழ்ச்சியின் மூலமாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நான் அதிகமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. ஒரே ஒரு வரியை மட்டும் நான் நினைவு கூற விரும்புகிறேன். இலங்கையைச் சேர்ந்த கா.சிவதம்பி என்ற மறைந்த பேராசிரியரின் வரி ஒன்றை இங்கு சொல்ல விரும்புகிறேன். ‘தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை. தொடர்ச்சியில் உள்ளது’. எனவே தமிழ் தொடர வேண்டும். தொடரும் என்ற அந்த நம்பிக்கை, இந்த 6 புதிய அறிவிப்பாளர்களின் பேசும் போது தெரிந்தது. அது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ரொம்ப அழகாகத் தமிழில் பேசினார்கள்”

“இவர்களுக்கு முந்தைய அறிவிப்பாளர்களை எனக்குத் தெரியும். ஸ்டூடியோவில் ஒரு நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட, அந்த அறிவிப்பாளர்களிடம் உட்கார்ந்து பேசுவோம். எனவே இந்த அறிவிப்பாளர்களும் தமிழ் உணர்வோடு பேசுவதைப் பார்க்கும் போது, எவ்வளவு தெளிவாக அவர்கள் செய்திகளை அளிக்கப் போகிறார்கள் என்பதைப் பெரும் மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கிறோம்.”

“ஒவ்வொரு ஆண்டும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில்நுட்பத்தில், ஏதாவது ஒரு புதுமை படைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருக்கும். குறிப்பாக மொழி சார்ந்த, தமிழ் சார்ந்த தொழில்நுட்பத்தில் ஏதாவது புதுமை படைக்க நினைப்பேன். அவ்வாறு பண்ணும் போது அதை வெளியிடுவதை விழுதுகள் நிகழ்ச்சியின் மூலமாகத் தான் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். ஏனென்றால், இது காலை நிகழ்ச்சி, ஒவ்வொரு நாளும் வரும் நிகழ்ச்சி, அனைவரும் பார்க்கின்ற நிகழ்ச்சி, மேலும் மாலையில் மறு ஒளிபரப்பும் செய்யப்படுகின்றது. எனவே இந்த நிகழ்ச்சியில் பேசுவதே எனக்குப் பெருமையான விசயம். இது தொடர்ந்து நடக்க வேண்டும். மேலும் சிறப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” இவ்வாறு முத்துநெடுமாறன் கூறினார்.