புதுடில்லி – அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற கையூட்டு (இலஞ்சம்) தர முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டிற்காக கடந்த நான்கு நாட்களாக டெல்லி காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் (இந்திய நேரப்படி) கைது செய்யப்பட்டார்.
டெல்லி காவல் துறையின் குற்றப் பிரிவு அவரை புதுடில்லிக்கு வரவழைத்துக் கடந்த 4 நாட்களாக விசாரணை செய்து வந்தது.
53 வயதான தினகரனுடன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார். டெல்லி காவல் துறையினர் தினகரனைத் தேடிக் கொண்டிருந்தபோது, அவரை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக மல்லிகார்ஜூனா கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறக் கையூட்டு தர இடைத் தரகராகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே சுகேஷ் சந்திரசேகர் என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இன்று புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில், சசிகலா-தினகரன் குடும்பத்தினரைக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டு, பிரிந்து நிற்கும் இரண்டு தரப்புகளும் இணைந்து, மீண்டும் அதிமுக சின்னத்தைக் கைப்பற்றவும், ஆட்சியைத் தொடரவும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.