Home இந்தியா இந்தியாவில் அதிபர் மாளிகையின் பராமரிப்புச் செலவு மட்டும் ரூ.100 கோடி!

இந்தியாவில் அதிபர் மாளிகையின் பராமரிப்புச் செலவு மட்டும் ரூ.100 கோடி!

418
0
SHARE
Ad

janaமும்பை, ஜூலை 21-இந்திய அதிபர் மாளிகையின் பராமரிப்புச் செலவு மட்டும் ஆண்டுக்கு ரூ 100 கோடி ஆகிறதாம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இத்தகவல் தெரிய வந்திருக்கிறது.

மும்பை புறநகரில் உள்ள ஜோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் தர்வேஸ்.கைபேசி உதிரிப்பாகக் கடை வைத்துள்ளார். இவர், இந்தியாவின் அதிபர் மாளிகையான ராஷ்டிரபதி பவனின் பராமரிப்புச் செலவு குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கடந்த ஜூன் மாதம் மனு செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த மனுவுக்குத் தற்போது பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதில், அதிபரின் தினப்படிச் செலவு மற்றும் தொலைபேசி கட்டணச் செலவு உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளாகத் தினப்படித் தொகை 33 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிபரின் தினப்படி, வீட்டு உபயோகப் பொருட்கள், ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஆகியவை சேர்த்து 2012-2013ஆம் ஆண்டில் ரூ.30.96 கோடி செலவாகியுள்ளது.

இது 2013-14ல் ₹38.70 கோடியாகவும், 2014-15ல் ரூ.41.96 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

அதிபரின் தலைமைச் செயலகம் மற்றும் ராஷ்டிரபதி பவனில் மொத்தம் 754 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்குச் சம்பளமாக மே மாதம் ரூ.1.52 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அதே மாதத்தில் தொலைபேசிக் கட்டணம் ரூ.5.06 லட்சம் ஆகி உள்ளது. இதற்கு முந்தைய மாதத்தில் தொலைபேசிக் கட்டணம் ரூ.4.25 லட்சமாக இருந்ததும் தற்போது உயர்ந்துள்ளது.

மாளிகைக்கு வரும் மிகவும் முக்கியமான விருந்தாளிகளுக்குச் (VVIP)  செலவழிக்கப்படும் செலவுகள் தனியாகக் கணக்கு வைக்கப்படுவதில்லை என்றும், அவை ஆண்டு வரவு-செலவுக் கணக்கில் வீட்டு உபயோகச் செலவுடன் சேர்க்கப்பட்டு விடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள செலவுக் கணக்குகள் வெறும் உதாரணம் மட்டுமே எனக் கூறியிருக்கிறார் மனுதாரர் தர்வேஸ்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இன்னும் மின் செலவு, பாதுகாப்பு ஊழியர்கள் செலவு என ஏகப்பட்ட செலவுகள் உள்ளன. அது குறித்து எந்தப் பதிலும் கூறப்படவில்லை.

எனவே, ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டுப் பார்த்தால், ராஷ்டிரபதி பவன் பராமரிப்புச் செலவு மட்டுமே ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாகவே இருக்கும்’ எனக் கூறி இருக்கிறார்.

இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்ட மனுக்களை விண்ணப்பித்திருக்கிறார்.

அண்மையில் இவர், பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தில் அவருடன் எத்தனை பிரதிநிதிகள் செல்கிறார்கள், அதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்பது குறித்துத் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.