சென்னை, ஜூலை 27- தமிழக அமைச்சரவையில் இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவர்மீது பல்வேறு புகார்கள் வந்து குவிந்ததையடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில், ஆளுநர் ரோசய்யா அவரை நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து, வெளியான செய்தியில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
செந்தில் பாலாஜி வகித்த போக்குவரத்து துறை தற்போது அமைச்சர் தங்கமணியின் வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில், பலமுறை அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பல அமைச்சர்கள் நீக்கப்பட்டும், பலர் புதிதாகச் சேர்க்கப்பட்டும் உள்ளனர். நீக்கப்பட்ட சிலர் மீண்டும் அமைச்சராகச் சேர்க்கப்பட்டும் இருக்கிறார்கள். அதனால், யாருக்கு எப்போது பதவி பறிபோகும் என்பது தெரியாமல் பயத்திலேயே அமைச்சர்கள் இருக்கின்றனர்.
ஆனால், இத்தனை முறை நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், மாற்றப்பட்டாத அமைச்சர்களாக இருந்தவர்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். அந்த அளவுக்கு ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெற்றவர் இவர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தலையில் இரட்டை இலைச் சின்னம் விளக்கை மாட்டிக் கொண்டு தெருத்தெருவாய்ச் சென்று ஓட்டுக் கேட்ட அமைச்சர் தான் இந்த செந்தில் பாலாஜி.
அப்படிப்பட்ட இவர் இப்போது திடீரென அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ,அதிமுக வட்டாரத்தில் இன்னும் பலருக்குக் கிலியைக் கிளப்பியிருக்கிறது.