கோலாலம்பூர், ஜூலை 27 – சரவாக் ரிப்போர்ட் மற்றும் அதன் ஊழியர்கள் எத்தகைய குற்றமும் புரியவில்லை என அதன் நிறுவனர் கிளேர் ரியூகேசில் பிரவுன் கூறியுள்ளார்.
எனவே இங்கிலாந்தில் குற்றம் புரியாத அந்த ஊழியர்களை மலேசியாவுக்கு நாடு கடத்த இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இங்கிலாந்து சட்டத்தால் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் எதையும் சரவாக் ரிப்போர்ட் புரியவில்லை. எனவே மலேசியாவுக்கு எப்படி நாடு கடத்த முடியும்? அதேபோல் மலேசியாவில் உள்ள தேச நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் என்னை நாடு கடத்த முடியாது.ஏனெனில் பல நூற்றாண்டுகளாக இத்தகைய செயல்பாடுகள் தேச நிந்தனையாக இங்கிலாந்தில் கருதப்படுவதில்லை. மேலும் இத்தகைய செயல்பாட்டை தேச நிந்தனையாகக் கருதும் வேறொரு நாட்டில் இங்கிலாந்து குடிமக்கள் விசாரிக்கப்படுவதை தற்போதைய இங்கிலாந்து பிரதமர் அனுமதிக்க வாய்ப்புள்ளதாக நான் கருதவில்லை” என்றார் கிளேர் பிரவுன்.
தேச நிந்தனை என்பது குறித்து மலேசியர்கள் யாருமே இதுவரை தெளிவாக விவரித்ததில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், செல்வாக்கு மிக்கவர்களைப் பற்றி செய்தி வெளியிட்டால் அது தேச நிந்தனையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அரச மலேசிய காவல்துறையின் விசாரணையை அடுத்து, கிளேர் பிரவுனை மலேசியாவுக்கு நாடு கடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோஷ்ரீ அகமட் சாகிட் ஹமிடி அறிக்கை ஒன்றின் வழி கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போதே கிளேர் பிரவுன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.