Home நாடு அம்னோவில் குழப்பம் ஏற்படக் காரணமாக இருக்க மாட்டேன் – மொகிதின் அறிவிப்பு

அம்னோவில் குழப்பம் ஏற்படக் காரணமாக இருக்க மாட்டேன் – மொகிதின் அறிவிப்பு

577
0
SHARE
Ad

Tan-Sri-Muhyiddin-Yassin2-1கோலாலம்பூர், ஜூலை 29 – துணைப்பிரதமர் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்ட டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று புக்கிட் டாமன்சாராவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவரிடம் பிரதமர் நஜிப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த மொகிதின், “நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. தற்போது அது வெறும் வார்த்தைகளாக மட்டுமே உள்ளது. பொறுப்புள்ள கட்சி உறுப்பினர் என்ற முறையில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதைப் பின்பற்றுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “அம்னோ துணைத் தலைவரான நான் தலைவருக்கும், கட்சியின் தலைமை உறுப்பினர்களுக்கும் கட்சியை வழிநடத்த உதவி செய்வேன். என்னைப் பொறுத்த வரையில் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் பிளவோ, குழப்பமோ எற்பட எந்த வகையிலும் காரணமாக இருக்க மாட்டேன்.”

“நான் புதிய ஆள் கிடையாது. நான் கட்சியில் நீண்ட காலமாக இருக்கும் ஒரு உறுப்பினர். தற்போது நான் துணைப்பிரதமராக இல்லாவிட்டாலும், நான் இன்னும் கட்சி உறுப்பினர் தான். என்னுடைய கடமைகளை நான் செய்யத் தவறமாட்டேன்.” என்றும் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

நேற்று அமைச்சரவையில் இருந்து மொகிதின் யாசின் நீக்கப்பட்டவுடன், பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு மொகிதினுக்கு எதிர்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அழைப்பு விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.