மினசோட்டா, ஆகஸ்ட் 12- அமெரிக்காவில் 3 வயதுச் சிறுவன் ஒருவன் நகர மேயராகப் பதவியேற்றுள்ள விந்தையான செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் டார்செட் . இந்நகரில் மொத்தம் 22 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர். இப்படிப்பட்ட குட்டி நகருக்கு ‘ஜெம்ஸ் டப்ட்டின்’ என்ற 3 வயது குட்டிச் சிறுவன் மேயராகப் பதவி ஏற்றுள்ளான்.
இன்னொரு விந்தை என்னவெனில், அவனுடைய 6 வயது அண்ணன் ராபர்ட் டப்ட் என்பவன் தான், இதற்கு முன்னர் அந்த நகருக்கு இரண்டு முறை மேயராக இருந்திருக்கிறான்.
மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கு அந்நகர மக்கள் குடவோலை முறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதாவது, அங்கு நடந்த வருடாந்திர உணவுத் திருவிழாவின்போது, மக்கள் தங்களுக்குப் பிடித்த நபரின் பெயரை எழுதி ஒரு பெட்டியில் போட்டுக் குலுக்கி, அதிலிருந்து ஒரு சீட்டை எடுத்து மேயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
அதில் மூன்று வயது சிறுவன் ஜேம்ஸ் டப்ட்டின் பெயர் வந்திருக்கிறது. இதையடுத்து ஜேம்ஸ் டப்ட்டின் கடந்த 2-ம் தேதி டார்செட் மேயராகப் பொறுப்பேற்றுக் கொண்டான்(ர்).
இன்னாள் மேயராகிய 3 வயது ஜெம்ஸ் டப்ட்டினுக்கு முன்னாள் மேயரான அவரது 6 வயது அண்ணன் ராபர்ட் டப்ட், மக்களிடம் அன்பாக இருக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார்.
அந்தச் சிறுவர்களின் தாயார் எம்மா டப்ட்ஸ்,”என் மகன்களை நினைத்துப் பெருமையாக உள்ளது. அவர்கள் மக்களுக்கு நிறைய நல்லது செய்வார்கள்” என்று பெருமிதமாகக் கூறியுள்ளார்.